சென்னை:இது தொடர்பாகதமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக "ஆளுநர் விருதுகள் 2024"-ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிமுகப்படுத்திய இந்த விருதுகள், 'சமூக சேவை' மற்றும் 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' ஆகிய இரண்டு பிரிவுகளில் சமூக நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிப்பதற்கும் முன்மாதிரியான பங்களிப்புகளை அளித்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் தன்னலமற்ற சேவைகளை அங்கீகரிக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் தலைசிறந்த நிபுணர்கள் அடங்கிய குழுவால் பரிசீலிக்கப்படும். விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 9ஆம் தேதி மாலை 500 மணி. 'சமூக சேவை', 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' ஆகிய இரண்டு பிரிவுகளிலும் தலா நான்கு வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
நிறுவனங்கள் பிரிவில் தேர்தெடுக்கப்படும் தொண்டு நிறுவனத்திற்கு ரூபாய் ஐந்து லட்சம் ரொக்கப் பரிசும், விருதும் மற்றும் தனிநபர் பிரிவில் தேர்தெடுக்கப்படும் நபருக்கு ரூபாய் இரண்டு லட்சம் ரொக்கப் பரிசும், விருதும் தமிழ்நாடு ஆளுநர் அவர்களால் குடியரசு தினத்தன்று (ஜனவரி 26, 2025) வழங்கப்படும்.
தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் தங்களது விண்ணப்பங்களை சுயமாக பரிந்துரைக்கலாம். ஓய்வு பெற்ற இந்திய மற்றும் தமிழ்நாடு அரசு உயர் அலுவலர்கள், அரசு செயலாளர்கள், அரசு இணைச் செயலாளர்கள், இந்திய அரசு, தமிழ்நாடு மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பத்ம விருது பெற்றவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மேலே குறிப்பிடப்பட்ட இரு பிரிவுகளில் சிறந்த வகையில் பணியாற்றிய தகுதியான தனிநபர்கள் அல்லது நிறுவனங்களை பரிந்துரைக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் அல்லது பரிந்துரைக்கப்பட்டவர்கள் அந்தந்தத் துறையில் தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் 10 வருட காலத்திற்கு சிறப்பான சேவையை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். அரசு சாரா அமைப்புகள் மற்றும் நிறுவனங்களும் இதற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
எப்படி விண்ணப்பிக்கலாம்?:விண்ணப்பங்களை, தமிழ்நாடு ஆளுநர் மாளிகை இணையதளத்தில் (https://tnrajbhavan.gov.in/) வெளியிடப்பட்டுள்ள பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி awardsrajbhavantamilnadu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு குறிப்பிட்ட கால நேரத்திற்குள் அனுப்பிவைக்க வேண்டும். மேலும், விண்ணப்பத்துடன் துணை ஆவணங்களை இணைத்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆளுநரின் துணைச் செயலாளர் மற்றும் கணக்காயர், ஆளுநர் செயலகம், ஆளுநர் மாளிகை, கிண்டி, சென்னை -600 022” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கர்மா - விதியை வெல்லும் சூத்திரங்கள்; சத்குருவின் புதிய புத்தகம் அறிமுகம்! - SADHGURU NEW TAMIL BOOK LAUNCH