கோயம்புத்தூர்: “திங்கட்கிழமை இரவு பலத்த மழை பெய்து கொண்டிருந்ததால் எனக்கு அதிகாலை 1.15 மணிக்கு முழிப்பு வந்தது. அப்போது ஒரு பெரிய சத்தம் கேட்டது. எங்கள் வீட்டிற்குள் திடீரென தண்ணீர் புகுந்தது. நாங்கள் அனைவரும் கட்டில் மீது ஏறி அமர்ந்தோம். ஆனால், அடுத்த நிமிடமே பெரிய மரக்கட்டைகள் எங்கள் வீட்டின் மீது முட்டி மோதியது” என தனது அனுபவத்தை கேரள மாநிலம் முண்டக்கை பகுதியைச் சேர்ந்த சுஜாதா சொல்லத் தொடங்குகிறார்.
ஆனால், அதற்கு முன்னதாகவே இந்த பதட்டத்தை உணர்ந்தது கேரளத்தின் வயநாடு பகுதியில் உள்ள சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகள். கடந்த திங்கள்கிழமை, அதாவது ஜூலை 29ஆம் தேதி இரவுதான், அடுத்த நாள் தாம் சந்திக்க உள்ள இன்னலை அறியாமல் பலர் தூங்கிக் கொண்டிருந்தனர், சிலர் தூங்க தயாராகிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் தொடங்கிய கனமழையில் திடீரென பெரிய இடி விழுந்த சத்தமும் கேட்டது. ஆனால், அது இடி அல்ல. அவை பாறைகள்.
என்ன இது பாறைகள் அடித்து வரப்படுகிறதே? என எண்ணிப் பார்ப்பதற்குள் கண்ணீரில் ஆழ்த்தியது பெருவெள்ளமும், நிலச்சரிவும். இதில், சிக்கி இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 50க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் 30 கி.மீ அப்பால் உள்ள நிலம்பூர் பகுதியிலும் கண்டுபிடிக்கப்பட்டது இந்த நிலச்சரிவின் கோர முகத்தைக் காட்டுவதை நம்மால் அறிய முடிகிறது. ஆனால், இதனிடையே தனது மகள் சுஜிதா, கணவர் குட்டன், பேரன் சூரஜ் (18) மற்றும் பேத்தி மிருதுளா (12) ஆகியோருடன் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார் சுஜாதா.
அது மட்டுமல்லாமல், இடிபாடுகளில் இருந்து பேத்தி கதறி அழுததைச் சமாளித்து அவளது கையை பிடித்துக்கொண்டு குடும்பத்தில் உள்ள மற்ற மூவரும் வெளியேறி, பாய்ந்தோடும் நீரை கடந்து மலைக்குச் சென்றதாக தனது அனுபவத்தை ஊடகங்களின் வாயிலாக பகிர்ந்தார் சுஜாதா.
“அப்போது பலத்த மழை பெய்தது. மின்சாரம் முழுவதுமாக துண்டிக்கப்பட்டு காடே இருளாக காணப்பட்டது. நாங்கள் நிற்கும் இடத்திற்கு அருகே தூரத்தில் ஒரு காட்டு யானை கூட்டம் இருந்தது. அந்த கூட்டம் எங்களை பார்த்தது. அதில் கொம்பன் (ஆண் யானையும்) நின்றிருந்தது. பார்க்கவே பயமாக இருந்தது” என இயற்கைப் பேரிடரில் இருந்து தப்பிப்பதற்காக யானையிடம் மாட்டிக் கொண்டோமோ என்ற நினைப்பை நம்முள் வட்டமிட வைத்தார் சுஜாதா.