சென்னை:நடப்பு கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்விற்கு 82 ஆயிரத்து 479 விண்ணப்பங்கள் கல்வியியல் மேலாண்மை தகவல் முறைமை (EMIS) இணையதளத்தின் வழியாக ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
நடப்பு கல்வியாண்டில் பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க விருப்பமுள்ள ஆசிரியர்கள் தங்களது EMIS ID உள்நுழைவின் மூலம் இணைய வழியாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, மே 25ஆம் தேதி வரை விண்ணப்பிக்க பள்ளிக்கல்வித் துறையால் கால அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது.
அதன் அடிப்படையில், மே 25ஆம் தேதி வரை தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களில், 18 ஆயிரத்து 920 விண்ணப்பங்கள் இடைநிலை ஆசிரியர் மாறுதலுக்கும், 9 ஆயிரத்து 295 விண்ணப்பங்கள் பட்டதாரி ஆசிரியர் மாறுதலுக்கும், 5 ஆயிரத்து 814 விண்ணப்பங்கள் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர் மாறுதலுக்கும். 1,640 விண்ணப்பங்கள் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் மாறுதலுக்கும் என மொத்தம் 35 ஆயிரத்து 669 விண்ணப்பங்கள் பதிவிடப்பட்டுள்ளன.
பள்ளிக் கல்வி இயக்கக நிருவாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் 25 ஆயிரத்து 711 விண்ணப்பங்கள் பட்டதாரி ஆசிரியர் மாறுதலுக்கும், 17 ஆயிரத்து 296 விண்ணப்பங்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர் மாறுதலுக்கும், 1,186 விண்ணப்பங்கள் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் மாறுதலுக்கும், 1,452 விண்ணப்பங்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் மாறுதலுக்கும், 176 விண்ணப்பங்கள் உடற்கல்வி இயக்குநர் (நிலை1) மாறுதலுக்கும், 989 விண்ணப்பங்கள் இடைநிலை மற்றும் இதர ஆசிரியர்கள் மாறுதலுக்கும் என மொத்தம் 46 ஆயிரத்து 810 விண்ணப்பங்கள் பதிவிடப்பட்டு உள்ளன.