தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெருகி வரும் டிஜிட்டல் அரெஸ்ட்.. ஒரு ரூபாய் கூட இழக்காதீங்க.. உடனே என்ன செய்யணும்..? - DIGITAL ARREST SCAM

ஆன்லைன் மோசடிகளில் மிக தீவிரமாக உள்ள டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் இருந்து நாம் விழிப்புணர்வோடு இருப்பது அவசியமாகும். இந்த மோசடியில் இருந்து நாம் எப்படி தற்காத்துக்கொள்வது என்பதை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

டிஜிட்டல் மோசடி தொடர்பான புகைப்படம்
டிஜிட்டல் மோசடி தொடர்பான புகைப்படம் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 24, 2024, 9:12 PM IST

சென்னை: டிஜிட்டல் அரெஸ்ட்... தமிழகம் உட்பட இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே இந்த சொல் புழக்கத்தில் இருந்து வருகிறது. இணைய வழி கைது (digital arrest) என்பது டிஜிட்டலை பயன்படுத்தி நடக்கும் மோசடி. ஒரு திருட்டு கும்பல் மூகமுடி அணிந்து வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிப்பதை போல, டிஜிட்டலை பயன்படுத்தி உலகத்தில் எங்கேயோ ஒரு மூலையில் இருந்துகொண்டு ஒருவரை ஓர் அறைக்குள் சிறைப்படுத்தி கொள்ளையடிக்கும் சூழல் பெருகிவிட்டது.

டிஜிட்டல் வழி மிரட்டல்கள்

தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் இருந்து பேசுகிறோம், கேஒய்சி-யை (KYC) புதுப்பிக்க வேண்டும் என கூறுவார்கள். சுங்கவரித்துறை அதிகாரிகள் பேசுகிறோம்.. உங்களின் சட்ட விரோத பொருட்கள் எங்களிடம் உள்ளது என கூறுவார்கள். காவல்துறை அதிகாரிகள் பேசுகிறோம்.. உங்கள் பெயரில் உள்ள கூரியரில் போதை பொருட்கள் கிடைத்துள்ளது. குற்ற செயலில் ஈடுபட்டதற்காக உங்களை கைது செய்ய போகிறோம் என கூறுவார்கள்.

இப்படி பல வழிகளில் பேசி டிஜிட்டல் கைது செய்வதாக குற்றவாளிகள் மிரட்டுவர். இப்படி பல டிஜிட்டல் கைது மோசடி கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக அதிகரித்து, பல கோடிக் கணக்காண பணம் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது.

சென்னை வழக்கறிஞருக்கு குறி

அண்மையில், மகாராஷ்டிரா காவல்துறை என வீடியோ காலில் தோன்றி, சென்னை வழக்கறிஞரை ஏமாற்ற முயன்ற மோசடி கும்பல் குறித்து ஆவடி காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று பதியப்பட்டுள்ளது. இந்த மோசடி குறித்து புகார் அளித்த வழக்கறிஞரிடம் ஈடிவி பாரத் நிருபர் பேசினார்.

அப்போது அவர், '' சென்னை, கொரட்டூர், கேசவன் நாயக்கர் தெருவில் வசித்து வருகிறேன். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளேன். கடந்த 16 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 11.30 மணியளவில் என்னுடைய கைபேசி எண்ணிற்கு வெளிநாட்டு எண்ணை போன்று ஒரு அழைப்பு வந்தது.

சென்னை வழக்கறிஞருக்கு வந்த மோசடி அழைப்பு (credit - ETV Bharat Tamil Nadu)

முதல் நபர் பேசுகையில், ''தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) அதிகாரி பேசுகிறேன்.. உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி பண மோசடியும், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள். இது தொர்பாக காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் உங்களை விசாரிப்பார்கள்'' என்று கூறி அழைப்பை துண்டித்துவிட்டார்.

இரண்டாவது நபர், ''காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் உங்கள் அடையாள அட்டை தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என நிருபித்து நீங்கள் இந்த வழக்கில் இருந்து உங்களை விடுவித்து கொள்ளுங்கள்''என கூறி அவரும் அழைப்பை துண்டித்துவிட்டார்.

வீடியோ காலில் வந்த காவல்துறை உடை அணிந்த மூன்றாவது நபர், '' நான் மகாராஷ்டிரா காவல்துறை ஆணையர் பேசுகிறேன்.. உங்கள் ஆதார் மூலமாக பெறப்பட்ட எண்களை வைத்து பண மோசடி நடைப்பெற்றுள்ளது. உங்கள் அருகில் யார் யார் உள்ளார்கள் என்பதை காட்டுங்கள்; விசாரணை முடியும் வரை, நீங்கள் யாரிடமும் பேசக்கூடாது'' என எச்சரித்தார்.

மோசடி அழைப்பு, ஆவடி காவல்துறை (credit - ETV Bharat Tamil Nadu)

கவனமாக செயல்பட்ட வழக்கறிஞர்

மேலும், அந்த மோசடி நபர் வாக்கி டாக்கியில் பேசுவது போலவும், உயர் அதிகாரிகளுக்கு சல்யூட் அடிப்பது போல என காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இருந்துதான் என்னிடம் பேசுகின்றனர் என நம்ப வைக்க பல முயற்சி செய்தனர். ஆனால், அவர்கள் போலியான மோசடி நபர்கள் என்பதை முன்கூட்டியே அறிந்து அனைத்தையும் ஆதாரத்துக்காக வீடியோ எடுத்தோம்.. ஒரு கட்டத்தில் நாங்கள் வீடியோ பதிவு செய்வது மோசடி நபர்கள் கண்டறிந்து கொண்டு இணைப்பை துண்டித்துவிட்டனர். ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் இது தொடர்பாக ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என்றார்.

எப்படி தப்பிப்பது

இந்நிலையில், இதுபோன்ற டிஜிட்டல் அரெஸ்ட்டில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பது குறித்து சைபர் க்ரைம் வழக்கறிஞர் கார்த்திகேயன் ஈடிவி பாரத்திற்கு தகவல் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், '' தொலைத் தொடர்பு ஆணையம், சுங்கவரித் துறை, காவல்துறை அதிகாரிகள் என எந்த வகையிலும் பேசி டிஜிட்டல் அரெஸ்ட் செய்வதாக கூறினால் அவை நூறு சதவீதம் பொய்யானது. இந்தியா போன்ற நாடுகளில் டிஜிட்டல் அரெஸ்ட் என்பது கிடையாது.

சைபர் க்ரைம் வழக்கறிஞர் கார்த்திகேயன், சைபர் மோசடி தொடர்பான கோப்புப்படம் (credit - ETV Bharat Tamil Nadu)

ஒரு வேளை பேசிய நபர்கள் சொல்வது உண்மை என நீங்கள் நினைக்கும்பட்சத்தில், அவர்கள் சொல்வதை கேட்டு தொலைபேசியை துண்டித்துவிட்டு, அருகில் உள்ள காவல் நிலையம் சென்று இந்த எண்களில் இருந்து அழைப்பு வந்தது உண்மையா? என விசாரித்து கொள்ளுங்கள். உங்களிடம் பேசும் நபர் வீடியோ கால் செய்து, உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்கின்றோம், நீங்கள் இருக்கின்ற அறையை விட்டு வேறெங்கும் செல்லக்கூடாது, வேறு யாரிடமும் பேசக்கூடாது என்பார்கள்.. அதை நம்பாதீர்கள்.

பயப்பட கூடாது

மேலும், ஒரு படி சென்று நீதிமன்ற உத்தரவு நகல், முதல் தகவல் அறிக்கை உள்ளிட்டவை காண்பிப்பார்கள், எனவே ஜாக்கிரதையாக இருங்கள். மோசடி நபர்கள் கேட்கிறார்கள் என்பதற்காக, வங்கி கணக்கு போன்ற நம்முடைய எந்த தகவலையும் தரக்கூடாது. நேரில் வருகிறேன் என கூறவேண்டும். பயப்படாமல் பேச வேண்டும், சரி பார்க்க வேண்டும் என கூறி உங்க வங்கியில் உள்ள பணத்தை ஆர்பிஐ-க்கு மாற்ற வேண்டும் என கூறுவார்கள் நம்ப வேண்டாம். அதுபோன்ற எண்களுக்கு பதில் அளிக்காமல் இருந்தாலே நாம் நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.

டிஜிட்டல் அரெஸ்ட் செய்து, நம் வங்கியில் உள்ள பணம் மட்டும் இல்லாமல், நம்மை லோன் எடுக்க வைத்து அந்த பணத்தையும் மோசடியாக பெற்று கொள்வார்கள். அதிகாரிகள் என கூறி உங்கள் ஆதார் கார்டை வைத்து, உங்கள் வங்கி கணக்கை வைத்து போதை பொருட்கள் கடத்தப்பட்டுள்ளது என கூறினால், நீங்கள் செய்யவில்லை என்றாலும் பயம் வரும் அதை அவர்கள் பயன்படுத்திகொள்கின்றனர்.

சீனாவில் இருந்து இயக்கம்

இதுபோன்ற மோசடி அழைப்புகள் எல்லாம், இந்தோனேஷியா, கம்போடியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இங்கிருந்து தான் இயக்கப்படுகிறது.
ஒட்டு மொத்தமாக இவர்களை இயக்குபவர்கள் சீனாவில் உள்ளார்கள். இதன் மூலம் இந்தியாவிற்கு எதிரான பொருளாதார தாக்குதலை சீனாவில் உள்ள மோசடி கும்பல் செய்கிறது.

இதை கட்டுப்படுத்துவதில் சிரமம் உள்ளது. ஏனெனில், இங்குள்ள பணம் கிரிப்டோ கரன்சியாக வேறு ஒரு நாட்டிற்கு செல்கிறது. கிரிப்டோ பணத்தை இந்தியா தடை செய்தால் இந்திய பணம் வெளிநாடு செல்வதை தடுத்து மோசடியை மொத்தமாக தடுக்க முடியும்'' என்றார்.

1930

இதுபோன்ற சைபர் மோசடிகளை நீங்கள் எதிர்கொள்ள நேரிட்டால், பதட்டப்படாமல் உடனே1930 எண்ணுக்கு புகார் தெரிவியுங்கள். பாதுக்காப்பாக இருங்கள்.

ABOUT THE AUTHOR

...view details