தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீல நிறத்தில் ஒளிரும் கடல் அலை - காரணம் என்ன? - FLUORESCENT WAVES

சென்னை கடல் பகுதிகளில் அலைகள் நீல நிறத்தில் ஒளிர்ந்த காட்சியை மக்கள் பிரமிப்புடன் ரசித்து சென்றனர். இதனை குறித்து ஆய்வாளர் வி.எஸ். சந்திரசேகர் ஈடிவி பாரத் தமிழுடன் சிலத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

chennai sea waves in blue color story thumbnail
சென்னை ஈசிஆர் பகுதிகளில் நீல நிறத்தில் மிளிர்ந்த கடல் அலைகள். (Etv Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 19, 2024, 1:03 PM IST

சென்னை:நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், விழுப்புரம், மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் நீல நிறத்தில் காட்சியளித்ததை மக்கள் வியந்து பார்த்தனர். இதனை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து தங்களின் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாசும், தனது எக்ஸ் தளத்தில் கடல் அலைகள் ஜொலித்ததைக் குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார். அதை படம்பிடித்தும் வீடியோவாக பதிவேற்றியிருந்தார். கடல் அலைகள் நீல நிறத்தில் தாவி வந்ததை மகிழ்ச்சியுடன் கண்டுகளித்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

நீல நிறத்தில் ஏன் கடல் அலை ஒளிர்கிறது, சிவப்பு நிறத்தில் ஒளிரும் அலைகளில் இருக்கும் ஆபத்துகள் என்ன என்பதை ஓய்வுபெற்ற இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் முதன்மை விஞ்ஞானி வி.எஸ். சந்திரசேகர் ஈடிவி பாரத் தமிழ் செய்தியாளருடன் சிலத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். அவர் பகிர்ந்த விவரங்களைக் கீழ்வருமாறுக் காணலாம்.

ஏன் கடல் அலை நீல நிறத்தில் மிளிர்ந்தது?

நீல நிற கடல் அலைகள் (கோப்புப் படம்) (Meta)

கடலில் ஏற்படும் நிறமாற்றத்தை சீ கோஸ்ட் (sea ghost), சி ஃபையர் (sea fire), சி ஸ்பார்க்கில் (sea sparkle) எனப் பரவலாக அழைக்கப்படுகிறது. ஆனால் இதற்கு அறிவியல் ரீதியான பெயர்களும், காரணங்களும் இருக்கின்றன. கடலில் தோன்றும் இந்த நிற மாற்றத்தை அறிவியல் பூர்வமாக 'பயோலுமிசென்ஸ்' என அழைக்கின்றனர். இதில் லூமிசென்ஸ் என்றால் ஒளிருவது என்று பொருள்படும். பயோ என்றால் உயிர் தொடர்பான பொருளைக் குறிக்கிறது.

கடலில் ஏற்படும் நீல நிறம் என்பது உயிரிகள் வாயிலாக ஏற்படுத்தக்கூடிய ஒரு ஒளிரும் தன்மையுடன் இருக்கும் வெளிச்சம் ஆகும். நம் கண்களுக்கு விருந்தளிக்கும் மின்மினி பூச்சி போன்று கடலிலும் பல உயிரினங்கள் ஒளிரும் தன்மையில் இருக்கின்றன. மேலும், கடலில் கண்களுக்கு தெரியாத பல ஆயிரக்கணக்கான நுண்ணுயிர்கள் இருக்கிறது.

உண்மையான டெங்கு காய்ச்சலை கண்டறிவதில் உள்ள சிக்கல்? - மருத்துவர் சாந்தி அளித்த விளக்கம்

கடல் நுண்ணுயிரிகள்:

நோக்டிலூகா சிண்டிலன்ஸ் (கோப்புப் படம்) (Meta)

கடலில் இருக்கும் பைட்டோபிளாங்க்டன் எனும் தாவர நுண்ணுயிர் மிதவை போன்ற, கடல் சூழல் மண்டலத்தில் உள்ள மிதவை உயிரிகள், கார்பனை கடலின் மேல் பகுதியில் உள்ள சூரிய ஒளி மண்டல அடுக்கிலிருந்து, கடலின் ஆழத்திற்குக் கொண்டு செல்கிறது.

மைக்ரோஸ்கோப் வாயிலாக பார்க்கப்படும் உயிரினமாக நுண்ணுயிர்கள் இருந்தாலும் கண்ணில் தென்படக்கூடிய அளவில் உள்ள பெரிய தாவர மிதவை நுண்ணுயிர்கள் வகையை சார்ந்ததாகும். நிலத்தில் எப்படி தாவரங்கள் உணவை உற்பத்தி செய்கிறதோ அதேபோல் கடலில் இருக்கும் தாவரங்கள் கடலில் உணவை உற்பத்தி செய்கிறது.

பையோலூமிசென்ஸ் என்பது கடலில் எப்பொழுதும் இருக்கக்கூடிய உயிரினமாக இருக்கிறது. பருவமழையைத் தொடர்ந்து அதிலிருந்து அடித்துவரப்பட்ட சத்துகளை உட்கொண்டு இவை பெருமளவில் இனப்பெருக்கம் செய்கின்றன. இதனால், மக்கள் கண்களில் இவை ஒளிரும் தன்மையுடன் தென்படுகின்றன என்கிறார் விஞ்ஞானி சந்திரசேகர்.

இவை ஏன் கடற்கரையில் தென்படுகிறது:

நிலப்பரப்பில் முதலில் உருவாகும் மழை வெள்ளம், அதிக கனிமங்களைக் கொண்டுவந்து கடல் நீருடன் சேர்க்கும். அதை உண்பதற்காக பைட்டோபிளாங்டன் மிதவை தாவரம் மழை நீர் கடலில் சேருமிடத்தில் அதிகளவு கூடும். இதுபோன்ற சமயங்களில் நம் கண்களுக்கு அவை எளிதாகத் தென்படுகிறது. இது வழக்கமாக நடைபெறும் ஒரு நிகழ்வு தான்.

முதல் பருவ மழை பெய்த பிறகு இரண்டு அல்லது மூன்று நாள்கள் கழித்து இது போன்ற நிகழ்வு ஏற்படக்கூடும். எங்கெல்லாம் நீர் நிலப்பரப்பில் இருந்து கடலில் கலக்கிறதோ, அங்கெல்லாம் நோக்டிலூகா சிண்டிலன்ஸ் (Noctiluca scintillans - லத்தீன் மொழியான இது ‘மின்னும் நைட்டிங்கேள்’ என்ற பொருளைக் குறிக்கிறது) அதிகம் தென்படும்.

பைக் பழசானா என்ன! இன்னும் 10 வருஷம் புதுசு மாதிரி ஓட வைக்கலாம்!

எது ஆபத்தை குறிக்கும்?

தீங்கு விளைவிக்கும் பாசிகள் (கோப்புப் படம்) (Meta)

கடற்கரையில் காணப்படும் நீல நிற அலைகளை பார்த்து பயப்பட வேண்டிய அவசியமில்லை என சந்திரசேகர் தெரிவித்துள்ளார். எனினும், கூடுதல் அடர் நிறத்தில் காணப்படும் வண்ணங்கள் இருக்கும் இடத்தில் குளித்தால் சில நேரங்களில் உடல் அரிப்புகள் ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் வரும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதே போல கடல் நீர், நீல நிறத்தில் இல்லாமல், சிவப்பு நிறமாக காட்சியளித்தால் அந்த இடத்தில் ஆபத்து இருக்கிறது. அதை உணர்ந்து அந்த கடல்நீரில் கால் வைக்காமல் இருப்பது நல்லது. இவை தீங்கு விளைவிக்கும் பாசிகளால் (harmful algal blooms - HABs) ஏற்படுவது ஆகும். சிவப்பு நிறம் சூழ்ந்திருக்கும் கடலில் இறங்கும்போது, அந்த இடத்தில் இவற்றின் நச்சுப்பொருள் கலந்திருக்கும்.

அதாவது, நீரில் மட்டும் அல்லாமல், காற்றிலும் கலந்திருக்கும். இதனால் ஆக்சிஜன் உமிழ்வு குறைவாக இருக்கும். இந்த சூழலில், மனிதர்கள் பெருமளவு பாதிக்கப்படுவதற்கு சாத்தியக்கூறுகள் இருப்பதாக சந்திரசேகர் விவரித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்.

ABOUT THE AUTHOR

...view details