தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலூர் ஆர்ப்பாட்டத்தில் ஐயப்ப பக்தர்களுக்கு சிக்கன் பிரியாணி? - போலீஸ் மீது இந்து முன்னணி பரபரப்பு குற்றச்சாட்டு!

வேலூரில், வங்கதேச இந்து உரிமை மீட்புக் குழு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காவல்துறை சார்பில் ஐயப்ப பக்தர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை செய்யப்படும் என்று மாவட்ட எஸ்.பி. தெரிவித்துள்ளார்.

இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 15 hours ago

வேலூர் :வேலூர் மாவட்டம், அண்ணா கலையரங்கம் அருகில் வங்கதேச இந்து உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வங்கதேசத்தில் இந்துக்கள் கொல்லப்படுவதைக் கண்டித்தும், வங்கதேச இந்துகளை பாதுகாக்கக் கோரி வங்கதேச இந்து உரிமை மீட்புக் குழு சார்பில், ஒருங்கிணைப்பாளர் புவன் ராஜ் தலைமையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தை இந்து முன்னணி அமைப்பின் கோட்ட பொறுப்பாளர் மகேஷ் துவங்கி வைத்தார். இதில் பாஜக மாநில பொறுப்பாளர் தசரதன், மாவட்டச் செயலாளர் பாபு உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து, தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

மாவட்ட எஸ்.பியிடம் உரையாடும் செய்தியாளர் (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில், மண்டபத்தில் அடைக்கப்பட்டவர்களுக்கு காவல்துறை சார்பில் மதிய உணவாக அசைவ உணவு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், மண்டபத்தில் அடைக்கப்பட்டவர்களுடன் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்திருந்த பக்தர்களுக்கும் இருந்ததால், அவர்களுக்கும் சேர்த்து அசைவ உணவு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த, இந்து முன்னணி அமைப்பினர் மண்டபத்தை விட்டு வெளியே வந்து காவல் துறையினரைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காவல் துறையினருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஐயப்ப பக்தர்களுக்கு வழங்கப்பட்ட அசைவ உணவு (Credits - ETV Bharat Tamil Nadu)

இது தொடர்பாக இந்து முன்னணி அமைப்பின் கோட்ட பொறுப்பாளர் மகேஷ் கூறுகையில், "நான் கடந்த 13 வருடங்களாக மாலை அணிவித்து, விரதம் இருந்து சபரிமலைக்கு சென்று வருகிறேன். காவல்துறையை நம்பி தான் நான் மண்டபத்தில் இருந்தேன். மதிய உணவு வழங்கப்பட்ட போது சைவ உணவா என நான் கேட்டேன்.

அதற்கு காவல் ஆய்வாளர் சைவ உணவு தான் என பதிலளித்தார். தற்போது சைவ உணவிற்கு பதில் அசைவ உணவு பரிமாறியதால் என்னுடைய விரதல் கலைந்து விட்டது. திட்டமிட்டு அசைவ உணவு எடுத்துட்டு வந்தாக தெரிகிறது. கார்த்திகை மாதம் எப்படி ஐயப்ப பக்தர்களுக்கு அசைவ உணவு பரிமாறலாம்?" என கேள்வி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க :"ஒத்திப்போகும் அரையாண்டு தேர்வுகள்".. என்ன காரணம்? அமைச்சர் அன்பில் மகேஷ் கொடுத்த அப்டேட்!

இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த வேலூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பிரித்திவிராஜ் சவுகான் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். சுமூகமான பேச்சுவார்த்தைக்குப் பின்னர் போராட்டகாரர்களை மீண்டும் தனியார் மண்டபத்தில் போலீசார் அடைத்தனர். அங்கு அவர்களுக்கு மாற்று உணவு வழங்கப்பட்டது.

இது குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகம் சார்பில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணனை தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டபோது, "நாம் சைவ உணவு தான் ஆர்டர் செய்தோம். சைவ உணவு தான் வந்தது. அதில், இறைச்சி இருந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகிறார்கள். நான் அதுதொடர்பாக விசாரணை செய்யப்படும் என்று சொல்லி இருக்கிறேன்.

ஆனால், எங்கள் ப்ரோட்டோகால் படி, சைவ உணவு தான் வழங்கப்படும். நாங்கள் சைவ உணவு தான் ஆர்டர் செய்தோம். இந்த விவாகரம் தொடர்பாக நான் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளரை விசாரணை செய்ய சொல்லி இருக்கிறேன்" என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details