மதுரை: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணிக்கு தடை விதிக்க உத்தரவிடக்கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, கந்தர்வகோட்டை பகுதியைச் சேர்ந்த பஞ்சநாதன் தாக்கல் செய்த மனுவில், "கந்தர்வகோட்டை, கோமபுரம் கிராமத்தில் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் பிரதான தொழிலாக விவசாயமும், விவசாயம் சார்ந்தவையுமே உள்ளன. இங்கு, எனது நிலம் உட்பட சுமார் 64 பேருக்கு சொந்தமான நிலம் உள்ளது.
இந்த நிலங்களுக்கான பாதையையும் நாங்களே பயன்படுத்தி வருகிறோம். இந்த நிலையில் திருமூர்த்தி என்பவர் எங்கள் நிலத்திற்கு அருகில் உள்ள இடத்தை வாங்கி, சோலார் அமைக்க திட்டமிட்டுள்ளார். அதற்காக தார்ச்சாலை அமைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார். இந்த வழியாகச் செல்லும் வாய்க்கால் தண்ணீர் மஞ்சபேட்டை முதலைமுத்து அணைக்குச் செல்கிறது.
தற்போது, இந்த அணையே இப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது. ஆகையால், இங்கு தார்சாலை அமைக்கப்பட்டால் இந்த அணைக்கு தண்ணீர் வருவது தடுக்கப்படும். இதனால், மக்கள் சிரமத்திற்கு ஆளாவர்கள். எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார் பட்டா நிலத்தில் தார்ச்சாலை அமைக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், "நீர் செல்லும் பாதையில் தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு அரசு தரப்பில், "மனுதாரர் குறிப்பிடும் பகுதியில் நீர் வழிப் பாதையை ஆக்கிரமிப்பு செய்து தார்ச்சாலை அமைக்கும் பணி எதுவும் நடைபெறவில்லை" என தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பு வாதத்தைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: பாலியல் வன்கொடுமை வழக்கில் காளிகாம்பாள் கோயில் பூசாரிக்கு நிபந்தனை ஜாமீன்