சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியைச் சேர்ந்தவர் அமிர்தவள்ளி (49). சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வரும் இவர், தற்போது புது பெருங்களத்தூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் வழக்கமாக பெருங்களத்தூர் ஏரிக்கரை பேருந்து நிலையம் சென்று பணிக்கு செல்வார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று (பிப்.15) பணிக்கு செல்வதற்காக வழக்கம்போல் பெருங்களத்தூர் ஏரிக்கரை பேருந்து நிலையம் நோக்கிச் சென்றுள்ளார் அமிர்தவள்ளி. அதற்காக அவர் ரயிவே தண்டவாளத்தைக் கடந்து செல்லும் போது செல்போனில் பேசிக்கொண்டே கடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது பெருங்களத்தூரில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரயில் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த அமிர்தவள்ளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தாம்பரம் இருப்புப்பாதை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.