போச்சம்பள்ளி: வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஃபெஞ்சல் புயல் தாக்கத்தில் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி, ஊத்தங்கரையில் அதி கனமழை பெய்தது. இதனால் ஏரி உடைந்ததால் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.
வங்க கடலில் மையம் கொண்டிருந்த ஃபெஞ்சல் புயல் மாம்மல்லபுரம்-புதுச்சேரி இடையே கரையைக் கடந்து பின்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கடந்ததால் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது.நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்தது கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி ஆகிய பகுதிகளில் 25 செ.மீ மழை பெய்தது.
இதனால் அங்குள்ள ஏரிக்கரை உடைந்து தண்ணீர் போச்சம்பள்ளி நகரப் பகுதியில் புகுந்துள்ளது. போச்சம்பள்ளி ஊருக்குள் புகுந்ததால் அந்தப் பகுதி வெள்ள காடாக மாறியது வெள்ள நீர் விழுந்ததால் போச்சம்பள்ளி காவல் நிலையம் முற்றிலும் தண்ணீரில் தத்தளித்து வருகிறது. அதே போல உப்பாரப்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளிக்குள்ளும் வெள்ளநீர் புகுந்துள்ளது.
இதையும் படிங்க:பேயாட்டம் போட்ட ஃபெஞ்சல் புயல்: 300 ஆண்டுகளில் நடந்ததே இல்லை
போச்சம்பள்ளியில் ஏரி உடைப்பு ஏற்பட்டதால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஆறுபோல் சென்றது. இதனை காண்பதற்காக இருபுறமும் மக்கள் குவிந்தனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். அதே போல ஊத்தங்கரையில் ஒரே நாளில் 50 செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக வானிலை மையம் தெரிவிதுள்ளது. ஊத்தங்கரை பேருந்து நிலையம் அருகே உள்ள பரசனேரி நிரம்பி அதிலிருந்த தண்ணீர் வெளியேறி ஊத்தங்கரை திருப்பத்தூர் சாலையில் வாடகைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பத்துக்கு மேற்பட்ட மினி பேருந்துகள், கார்கள் அடித்து செல்லப்பட்டுள்ளன.
அதிக அளவு தண்ணீர் செல்வதால் திருப்பத்தூர் செல்லும் சாலை தற்காலிகமாக மூடி வைக்கப்பட்டுள்ளது, அதேபோன்று ஊத்தங்கரையில் இருந்து அரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தெப்பக்குளம் நிரம்பி அதிலிருந்து வெளியேறி நீர் சாலையில் அதிகளவு செல்வதால் இந்த சாலையின் தற்போது மூடப்பட்டுள்ளது, இதனால் ஊத்தங்கரை பகுதியில் போக்குவரத்து பெரியளவு பாதிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை முடிந்து ஊத்தங்கரையில் இருந்து இன்று பணிக்கு செல்வார்கள் பேருந்துகள் ஏதும் ஊத்தங்கரை நகர பகுதிக்கு வராத காரணத்தினால் கடும் அவதிப்பட்டு வருகின்றனர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் சரயு மற்றும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை பேச்சுவார்த்தை செய்து உடனடியாக வீடுகளில் உள்ள தண்ணீரை அகற்றப்படும் உறுதியளித்ததன் பேரில் கலைத்தனர்.