சென்னை:புதிய 250 KVA மின்மாற்றியை மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி சென்னை ஜாபர்கான்பேட்டை சுந்திரமூர்த்தி தெரு பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்ற மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், புதிய மின்மாற்றியை மக்களை பயன்பாட்டிற்கு ஒப்படைத்தார்.
ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் மின்மாற்றி: அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “ஓவர் லோடாக இருக்கும் மின்மாற்றிகளை கண்டறிந்து கூடுதல் மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு வருகிறது. சைதாப்பேட்டையில் 7 இடங்களில் கூடுதல் மின்மாற்றிகள் வைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அடுத்து புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று 139வது வட்டத்தில் 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 250 KVA மின்மாற்றி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் 4 தெருக்களை சார்ந்த சுமார் 1500 வீடுகள் பயன்பெறும்” என்றார்.
மருத்துவமனைக்கு அபராதம்:இர்பான் விவகாரத்தில் புகார் கொடுக்கப்பட்டும் இதுவரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்படாதது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் சேவை 10 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது. 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இர்பான் வெளிநாட்டில் இருக்கிறார். அவர் வந்த பிறகு அதற்கான பதில் பெறப்படும்.
சம்பந்தப்பட்ட யூடியூபர் மற்றும் மருத்துவமனையின் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குநரகம் (DMS - Directorate of Medical and Rural Health Services) சார்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சட்டரீதியான நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொள்வார்கள். இந்த விவகாரத்தில் காலதாமதம் ஆகவில்லை.
பிரசவத்தின் போது குழந்தை இறப்பு இல்லாத மாவட்டம்:துறையின் சார்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டத்துக்கு உட்பட்டு என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்க முடியுமோ எடுக்கப்பட்டுள்ளது. இர்பான் மீதும் சட்ட ரீதியான, துறை ரீதியான நடவடிக்கைகள் தொடரும்” என்றார். பிரசவத்தின் போது குழந்தைகள் உயிரிழப்பை தவிர்க்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பான கேள்விக்கு, “ஆரம்ப சுகாதார நிலையங்களில் யோகா பயிற்சி கொடுக்கப்பட்ட பிறகு மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது.