தேனி: தேனி மாவட்டம் ராசிங்காபுரத்தை சேர்ந்த மகேந்திரன் மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தேனி மாவட்டம் தப்புக்குண்டு சாலை பகுதியில் தேனி அரசு சட்டக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் 700 மாணவர்கள் பயின்று வருகின்றனர். கல்லூரியின் அருகில், தேனி அல்லிநகரம் நகராட்சி நவீன கலவை உரக்கிடங்கு செயல்பட்டு வருகிறது. இங்கு கொட்டப்படும் கழிவுகளாலும், சில நேரங்களில் கழிவுகள் எரிக்கப்படுவதால் உருவாகும் புகையாலும் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இந்த குப்பை கிடங்கை இங்கிருந்து அகற்றுமாறு பலமுறை மனு அளிக்கப்பட்டதோடு, போராட்டங்கள் நடைபெற்றும் இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கல்லூரியின் விடுதியில் தங்கிப் பயிலும் மாணவர்கள் அடிக்கடி உடல் நல குறைவால் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே தேனி அரசு சட்டக் கல்லூரியின் அருகே அமைந்துள்ள தேனி அல்லிநகரம் நகராட்சி நவீன கலவை உரக்கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி, " கல்லூரியின் முதல்வர் தொடர்ச்சியாக புகார் மனு அனுப்பியுள்ளார். இருப்பினும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது தொடர்பான நீதித்துறை நடுவர் அறிக்கையில், "குப்பை கிடங்கு அருகில் சட்டக்கல்லூரி மட்டும் இன்றி வேறு இரண்டு கல்வி நிறுவனங்களும் செயல்பட்டு வருவதாகவும், அப்பகுதியில் உள்ள தண்ணீர் எதற்கும் உகந்தது அல்ல" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.