சென்னை: தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஹசீனா சையத், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது கூறியதாவது, "இந்திரா காந்தியால் துவங்கப்பட்ட மகளிர் காங்கிரஸ்-க்கு தமிழ்நாடு மாநில தலைவியாக பொறுப்பேற்றுள்ளேன்.
அனைத்து காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா ஒரு இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. நமக்கென்று ஒரு பாரம்பரியம் உள்ளது. ஆனால், நம்மை ஆண்டு கொண்டிருக்கும் பாஜக பாசிச சக்தி, இதற்கு எதிர்மறையான விஷயங்களை செய்து கொண்டிருக்கிறது.
எப்பொழுதும் தமிழ்நாட்டில் பாஜகவை மக்கள் நமக்கு உறுதுணையாக எதிர்த்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால், பாஜக நமது நாட்டின் வேற்றுமையில் ஒற்றுமையை சுரண்டுவதற்கான பல விதமான சூழ்ச்சிகளை செய்து வருகிறது. அவை அனைத்தையும் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் முழுமையாக எதிர்க்கும்.
நேற்று ராஜஸ்தானில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டில் நமது பெண்கள் உயிரை விட மேலாக மதிக்கும் தாலியைப் பற்றி கேலியாக பேசியுள்ளார். பாஜக மகளிரணியில் பொறுப்பாளராக இருக்கும் வானாதி சீனிவாசன் என்றாவது தமிழ்நாட்டில் பாதிக்கப்படும் பெண்கள் குறித்து பேசி உள்ளாரா?
மணிப்பூரில் நடந்த கொடுமைகள் பற்றி பேசியுள்ளாரா? இது போன்று பாஜகவில் இருக்கும் ஒவ்வொரு தலைவர்களும் பெண்களை கேலியாகவும், அவதூறாகவும் பேசுகின்றனர். இனியும் தமிழ்நாட்டு மகளிர் காங்கிரஸ் அணி இதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது.
பெண்களுக்கான நியாயங்களை மையமாகக் கொண்டு ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டார். பெண்களுக்கு எதிராக ஒரு அநியாயம் நடக்கிறது என்றால், அதில் முதல் குரல் கொடுப்பவர் எங்கள் ராகுல் காந்தி தான். நிச்சயமாக காங்கிரஸ் ஆட்சி வரும்பொழுது, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க நாங்கள் உறுதுணையாக இருப்போம்.