தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"5,960 ஆசிரியர்களுக்கு பணி ஆணைகளை வழங்குங்கள்" தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழக அரசின் நிதி நெருக்கடி ஆசிரியர்கள் நியமனத்தை எந்த வகையிலும் பாதிக்கக்கூடாது.5,960 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை உடனடியாக வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ராமதாஸ் கோப்புப்படம்
ராமதாஸ் கோப்புப்படம் (Photo Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 11, 2024, 3:42 PM IST

சென்னை:ஆசிரியர்களுக்கு பணி ஆணைகளை உடனடியாக வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளுக்கு 3,192 பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பல மாதங்களுக்கு முன்பாகவே நிறைவடைந்து விட்ட நிலையில், அவர்களை பணி நியமனம் செய்ய அண்மையில் நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறை ஆய்வுக் கூடத்தின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாடு அரசின் கொள்கை அளவிலான ஒப்புதல் கிடைத்த பிறகு தான், ஆசிரியர்கள் நியமனத்திற்கான அறிவிக்கையே வெளியிடப்படும். ஆனால், தேர்வு முடிவுகளே வெளியிடப்பட்டு பல மாதங்களான பிறகு ஆசிரியர்கள் நியமனத்திற்கு முதலமைச்சர் ஒப்புதல் அளித்திருப்பதாகக் கூறப்படுவது வினோதமாக உள்ளது.

3,192 பட்டதாரி ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் நாள் வெளியிடப்பட்டது. அதன்படி விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த பிப்ரவரி 4ம் தேதி போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் மே மாதம் 18ம் தேதி வெளியிடப்பட்டன.

அதைத் தொடர்ந்து ஜூன் மாதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் ஜூலை 18ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்பின் 3 மாதங்களுக்கு மேலாகியும், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்படாததை கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி சுட்டிக்காட்டிய பாட்டாளி மக்கள் கட்சி, தமிழக அரசு கடுமையான நிதி நெருக்கடியில் தள்ளாடுவதால் தான் ஆசிரியர்கள் நியமனத்தை கிடப்பில் போட்டிட்ருப்பதாக குற்றஞ்சாட்டியது.

இதையும் படிங்க:"2026-ல் கூட்டணி ஆட்சி தான் அமையும்" - அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை!

அதன்பின் ஒரு மாதத்திற்குப் பிறகு பட்டதாரி ஆசிரியர்கள் நியமனங்களை மேற்கொள்ளும்படி முதலமைச்சர் கூறியிருப்பதன் மூலம், நிதி நெருக்கடி காரணமாகத் தான் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது உறுதியாகியிருக்கிறது. பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கான முடிவுகள் வெளியிடப்பட்டு 4 மாதங்களுக்கு மேலாகி விட்ட நிலையில் உடனடியாக பணி நியமன ஆணைகளை தமிழக அரசு வழங்க வேண்டும்.

அதேபோல், அரசு பள்ளிகளுக்கு 2,768 இடைநிலை ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஜூலை 21ம் நாள் போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டன. ஒரு போட்டித் தேர்வு நடத்தப்பட்ட அடுத்த சில நாட்களில் அதற்கான விடைக்குறிப்புகள் வெளியிடப்பட வேண்டும்.

அவ்வாறு வெளியிடப்பட்ட விடைக்குறிப்புகள் தொடர்பாக தேர்வர்களுக்கு ஏதேனும் மாற்றுக் கருத்துகள் இருந்தால், அவை ஆய்வு செய்யப்பட்டு ஒருமித்த கருத்து உருவாக்கப்பட்ட பிறகு தான் விடைத்தாள்களை திருத்தும் பணிகள் தொடங்கும். ஆனால், தேர்வு நடத்தப்பட்டு இன்றுடன் மூன்று மாதங்கள் ஆகும் நிலையில், இதுவரை விடைக்குறிப்புகளை தேர்வு வாரியம் வெளியிடவில்லை.

இதற்கும் தமிழக அரசின் நிதி நெருக்கடி தான் காரணம் என்று கூறப்படுகிறது. ஒரு மாநில அரசின் முதல் செலவு கல்விக்கானதாகத் தான் இருக்க வேண்டும். தமிழக அரசின் நிதிநெருக்கடி ஆசிரியர்கள் நியமனத்தை எந்த வகையிலும் பாதிக்கக்கூடாது. எனவே, 2768 இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதற்காக நடத்தப்பட்ட போட்டித்தேர்வின் விடைத்தாள்களை உடனடியாக திருத்தி, தகுதியானவர்களை கண்டறிந்து பணி நியமன ஆணைகளை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details