சென்னை:தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகளை ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்திடக் கூடாது எனவும், தேர்தல் நாளில் வாக்குப்பதிவு மையத்தில் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்றும் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு மனு அளித்துள்ளது.
இது தொடர்பாக, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “18வது நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் சிறப்பான முறையில் நடைபெறுவதற்கு ஆசிரியர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருக்கின்றோம்.
பத்தாம் வகுப்பு தேர்வு வரும் மார்ச் 26ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. அதன் தொடர்ச்சியாக, விடைத்தாள் மதிப்பிடும் பணி ஆசிரியர்களுக்கு தொடங்குகிறது. விடைத்தாள் மதிப்பிடும் பணி ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து, வாரத்தின் ஆறு நாட்களும் நடைபெறும்.
வாரத்தில் ஆறு நாட்களும் மிகவும் கூர்மையாகவும், கவனமுடன் மேற்கொள்ளும் முக்கிய பணியாக விடைத்தாள் மதிப்பிடும் பணியை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டியிருப்பதால், ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து பிற நாட்களில் பயிற்சி அளிக்கும் போது, தேர்தல் பணிக்கான பயிற்சியையும் சிறப்பாக கையாளுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். ஆகவே, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கால அட்டவணையில், ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து பயிற்சி வகுப்புகள் அமைத்திட வேண்டும்.
தேர்தல் பணிகளில் பங்குபெறும் அனைவருக்கும் தேர்தல் பணியாற்றும் இடங்களிலும், பயிற்சிகள் நடைபெறும் பள்ளிகளிலும் அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் அமைத்து தர வேண்டும். தேர்தல் பணியாற்றும் அலுவலர்களுக்கு அடிப்படை வசதிகள், தேர்தல் பணியாற்றும் இடங்களில் உணவு மற்றும் கடுமையான வெயில் காலம் என்பதால், குடிநீர் மற்றும் தேர்தல் முடிவடைந்த பிறகு தேர்தல் முடிந்த இடத்திலிருந்து பாதுகாப்பாக திரும்பும் வகையில், போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.