சென்னை:சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதை உறுதி செய்வதற்கு சமூக ஆர்வலர்கள் கொண்ட குழுக்களை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட இணை நோயாளிகளை அந்த குழுக்களில் ஒருங்கிணைந்து, ஒருவருக்கொருவர் உதவியுடன் நோய்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க ஒத்துழைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் சோதனை முயற்சியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் இது விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆர்) தேசியநோய்ப் பரவியல் நிறுவனம், பொது சுகாதாரத் துறை ஆகியவை ஒருங்கிணைந்து இந்த செயல் திட்டத்தை முன்னெடுத்துள்ளன.
இது குறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; தமிழகத்தில் 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தின் கீழ் இணை நோய் உள்ளவர்களைக் கண்டறிந்து வீடு தேடிச் சென்று பரிசோதனை மற்றும் மருந்து வழங்கப்படுகிறது. அதில் கோடிக்கணக்கான மக்கள் இதுவரை பயனடைந்துள்ளனர். ஒருபுறம் மருந்துகளையும், சிகிச்சைகளையும் வழங்கினாலும், நோயாளிகள் தங்களது வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளாமல் இருப்பதால் அவர்களுக்கு ரத்த அழுத்தமும், சர்க்கரை நோயும் கட்டுப்பாட்டுக்குள் வருவதில்லை.
இதையும் படிங்க: “ரூ.12 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு தாரைவார்க்கப்பட்டது”.. எடப்பாடி பழனிசாமிக்கு டி.ஆர்.பி.ராஜா பதிலடி!
கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பயனாளிகள் 4,206 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 56 சதவீதம் பேரின் ரத்த அழுத்தமும், 58.3 சதவீதம் பேரின் ரத்த சர்க்கரை அளவும் மட்டுமே கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. 47.59 சதவீதம் பேர் உடல் பருமன் கொண்டவர்களாகவும், புகையிலை, மது குடிப்பவர்களாகவும் இருக்கின்றனர்.
இத்தகைய வாழ்க்கை முறையில் உள்ளவர்களுக்கு மருந்துகளை முறையாக வழங்கினாலும், இணை நோய்கள் கட்டுப்பாட்டுக்குள் வராது. எனவே, ஒவ்வொரு சுகாதார வட்டத்திலும் சமூக ஆர்வலர்கள் கொண்ட குழுக்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். இணை நோயாளிகள் அனைவரையும் அந்த குழுக்களில் ஒருங்கிணைத்து, பரஸ்பரம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற ஒத்துழைப்பு வழங்க வலியுறுத்த உள்ளோம்.
நோய்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர்கள், பிறருக்கு முன்மாதிரியாக செயல்பட்டு வழி நடத்தவும், ஒருங்கிணைந்து உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். முதல்கட்டமாக விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் இத்திட்டத்தை செயல்படுத்தி, அதன் முடிவுகளை ஓராண்டுக்கு பின்னர் ஆய்வு செய்ய உள்ளோம். அதன் அடிப்படையில் மாநிலம் முழுவதும் இதனை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.