தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமைச்சரவை முடிவுக்கு கட்டுப்பட்டவர்தான் ஆளுநர் - மீண்டும் உறுதி செய்த உயர்நீதிமன்றம் - GOVERNOR VS TAMILNADU GOVT

அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் தான் என, முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி ஆயுள் தண்டனை கைதி தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Madras High Court and Tamilnadu Governor R N Ravi
உயர்நீதிமன்றம் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி (ETV Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 17, 2024, 6:28 PM IST

சென்னை: கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள வீரபாரதி என்பவர் நன்னடத்தை அடிப்படையில் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்து வருவதாகவும், நன்நடத்தை அடிப்படையில் பலர் விடுதலை செய்யப்பட்டிருப்பதால், தன்னையும் முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி சிறைத்துறை டிஜிபி தலைமையிலான மாநில குழுவிடம் மனு அளித்திருந்ததாக தெரிவித்திருந்தார்.

இதே குற்றத்திற்காக தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்தவர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும், உரிய ஆய்வு செய்தே மாநில அளவிலான குழு, முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக பரிந்துரை செய்ததன் அடிப்படையில், தமிழக முதல்வருக்கு கோப்புகள் அனுப்பபப்பட்டதாகவும், தமிழக முதல்வர் தலைமையிலான அமைச்சரவை அதற்கான அனுமதியை வழங்கி தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

ஆனால், தமிழக ஆளுநர் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு ஒப்புதல் வழங்காமல் நிராகரித்துவிட்டதாக சுட்டிகாட்டியுள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்து தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம், வி.சிவஞானம் அமர்வு, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு பின் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்டோர் வழக்குகளில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை மேற்கோள்காட்டி, அமைச்சரவை முடிவுகளுக்கு ஆளுநர் கட்டப்பட்டவர் என்றும், ஆளுநர் அதை மீறி செயல்பட முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

இதில்,கைதிகளை விடுதலை செய்யும் அமைச்சரவை முடிவில் முரண்பட ஆளுநருக்கு தனிப்பட்ட தார்மீக உரிமை இல்லை எனக் கூறி, முன் கூட்டியே விடுதலை செய்ய மறுத்த உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், மனுதாரரை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரும் மனுவை மீண்டும் பரிசீலிக்க உத்தரவிட்டனர். அதுவரை அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details