திருச்சி: திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய வெளிநாடுகளுக்கும், சென்னை, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நேற்று துபாயில் இருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணி ஒருவர் தங்கம் கடத்தி வருவதாக வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில், துபாயில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்தனர்.
அப்போது ஒரு பயணியின் உடைமைக்குள் இருந்த புட் ப்ராசசர் (Food Processor) மற்றும் மிக்சர் ஜூஸர் (Mixer Juicer) சாதனத்தை சோதனை செய்த போது, அதில் 2 ஆயிரத்து 579 கிராம் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. கிட்டத்தட்ட 1.83 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், தங்கத்தை கடத்தி வந்த பயணியை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.