சென்னை:இலங்கையிலிருந்து சென்னை வரும் ஸ்பை ஜெட் பயணிகள் விமானத்தில் பெருமளவு தங்கம் கடத்திக் கொண்டு வரப்படுவதாகவும் அந்த தங்கத்தை சுங்க சோதனை இல்லாமல், வெளியில் எடுத்து செல்வதற்கு அந்த தனியார் விமான நிறுவனத்தின் பிக்கப் வாகனத்தை இயக்கும் டிரைவர் துணையுடன் இது நடக்க இருப்பதாகவும், சென்னையிலுள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு, ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை தனிப்படை அதிகாரிகள் நேற்று (ஜன.30) சென்னை விமான நிலையத்தில் பிசிஏஎஸ் எனப்படும், விமான பாதுகாப்பு அதிகாரிகளிடம் சிறப்பு அனுமதி பெற்று விமான நிலைய ஓடுபாதையில் சென்று காத்திருந்தனர்.
இதில், அனைவரும் சாதாரண உடையில் இருந்ததால், விமான நிலையத்தில் அவர்கள் மீது யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. இந்த நிலையில் அந்த தனியார் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையம் பகுதியில் வந்து தரை இறங்கியது. பயணிகள் ஏரோ பிரிட்ஜ் மூலம் விமானத்திலிருந்து வெளியேறி குடியுரிமை சோதனை பிரிவுக்குச் சென்றனர்.
அந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடமைகள் விமானத்திலிருந்து கன்வேயர் பெல்ட் மூலம் அந்த விமான நிறுவனத்தின், பிக்கப் வாகனத்திற்கு வந்து கொண்டிருந்தது. அந்த பிக்கப் வாகனத்தை இயக்கும் டிரைவர் ராஜ்குமார்(35) என்பவர் அதில், 2 பயணிகளின் சிறிய பைகளை மட்டும் எடுத்து தனது இருக்கை அருகே கொண்டு போய் வைத்தார்.
இதை ரகசியமாக கண்காணித்த மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் அதிரடியாக விரைந்து பிக்கப் வாகனத்தில் ஏறி, டிரைவர் மறைத்து வைத்த இரண்டு பைகளையும் எடுத்து சோதனை செய்தனர். அதில், தங்கக் கட்டிகள் மற்றும் தங்க பேஸ்டுகள் இருந்ததை கண்டுபிடித்தனர். இரண்டு பைகளிலும் 5.5 கிலோ தங்கம் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.3.3 கோடி ஆகும்.
இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தங்க கட்டிகள் மற்றும் தங்க பேஸ்ட்டை பறிமுதல் செய்து, தனியார் பிக்கப் வாகன டிரைவர் ராஜ்குமாரை கைது செய்தனர். பின்னர், சென்னை விமான நிலைய சுங்கத்துறை அலுவலகம் அழைத்து வந்து தீவிரமாக விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், இலங்கையைச் சேர்ந்த முகமது அக்ரம்(30), முகமது வாசிம்(28) ஆகிய 2 பயணிகள் இந்த தங்கக் கட்டிகளை கடத்தி வந்ததாகவும், அவர்கள் விமான நிலையத்தில் குடியுரிமை சோதனை மற்றும் சுங்க சோதனைப் பிரிவுகளில் சோதனைக்காக நிற்பதாகவும் கூறியுள்ளார். மேலும், இந்த தங்கத்தை ராஜ்குமார் சுங்கச் சோதனை இல்லாமல் வெளியில் எடுத்துச் சென்று, விமான நிலையத்திற்கு வெளியில் வைத்து, அவர்களிடம் இந்த தங்க கட்டிகளை ஒப்படைக்க இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
உடனடியாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் அதிரடியாக செயல்பட்டு, விமான நிலையத்திற்குள் குடியுரிமை சோதனையை முடித்துவிட்டு, சுங்க சோதனைக்காக, தரை தளத்துக்கு இறங்கி வந்த, கடத்தல் பயணிகள் முகமது அக்ரம், முகமது வாசிம் ஆகிய இருவரையும் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
அதன்பின், மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் மூன்று பேரையும், சென்னை தியாகராய நகரில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வுத் துறை தலைமை அலுவலகத்திற்கு கொண்டுச் சென்று விசாரித்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த ரிபாயூதீன் (45) என்ற பிரபல கடத்தல் கும்பலின் தலைவன் ஏற்பாட்டில் இந்த கடத்தல் தங்கம் இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்தது என்று தெரியவந்தது.
மேலும் இலங்கைச் சேர்ந்த கடத்தல் ஆசாமிகள் இருவரும் இந்த கடத்தல் தங்கத்தை கொண்டுச் சென்று ரிபாயூதீனிடம் கொடுக்க இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறை கடத்தல் கும்பல் தலைவன் ரிபாயூதீனை சென்னையில் வைத்து கைது செய்தனர்.
மேலும், கடத்தல் கும்பல் தலைவன் ரிப்யூதீன் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு, கடத்தல் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்புதான் ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்தது.
மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கடத்தல் சம்பவத்திற்கு யாராவது துணை செய்தார்களா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:பெண் பாஜக பிரமுகரை கொலை செய்த விவகாரம்: ஜாமீனில் வந்தவர் கொடூரமாக கொலை..குற்றவாளிகளுக்கு போலீசார் வலைவீச்சு