நீலகிரி:நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாத இறுதியில் துவங்கும் தென்மேற்கு பருவமழை செப்டம்பர் மாதம் வரை பெய்யும். அந்த வகையில், இந்த ஆண்டு பருவமழையின் தாக்கம் குறைந்து காணப்படும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மிதமான முதல் கனமழை வரை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், தமிழகத்திற்கு இன்று ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நீலகிரி மாவட்டம் கூடலூர், குன்னூர், உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பணிக்கு செல்வோர் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். மேலும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக தேவாலாவில் 186 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
கனமழையால் உதகை கல்லகொரை சாலையில் ராட்சத மரம் சாலையின் குறுக்கே விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து விரைந்து வந்த தீயணைப்புத்துறை மற்றும் பொதுமக்கள், மரத்தை அறுத்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் சில மணிநேரம் காத்திருந்தன. பின்னர், மரத்தை அறுத்து அகற்றிய பின் போக்குவரத்து சீர் செய்யப்பட்டது
இதையடுத்து, பந்தலூரில் நேற்று முன்தினம் 32 மி.மீ மழையும், சேரம்பாடியில் 28 மி.மீ, தேவாலாவில் 61 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. தற்பொழுது மேகமூட்டத்துடன் கூடிய மழை பெய்து வருவதால், பந்தலூர் அருகே உப்பட்டி பெருங்கரை பகுதியில் வசித்து வரும் கூலித்தொழிலாளி ஞானசேகரன் என்பவரது வீட்டின் ஒருபகுதி சுவர் இடிந்து விழுந்து சேதமானது.