சென்னை:தாய்லாந்து நாட்டிலிருந்து டெல்லி வழியாக சென்னைக்கு விமானம் மூலம் கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாக சென்னை மாநகர போதை பொருள் தடுப்பு சிறப்புப் பரிவு போலீசாருக்கு நேற்று (நவ.11) நள்ளிரவில் தகவல் கிடைத்தது.
இந்த தகவல் பேரில் போதை தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் நேற்று நள்ளிரவில் இருந்து டெல்லியில் இருந்து சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வரும் விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்துக் கொண்டு இருந்தனர். அப்போது இன்று காலை டெல்லி - சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் வந்த புழல் பகுதியைச் சேர்ந்த முகமது பாரூக் (30) என்பவரிடம் சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது போலீசார் முகமது பாரூக்கின் உடைமைகளை முழுமையாக பரிசோதித்ததில் அவருடைய உடமைகளுக்குள் ஒரு பார்சல் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. அதை எடுத்துப் பிரித்துப் பார்த்தபோது பதப்படுத்தப்பட்ட உயர்ரக கஞ்சா சுமார் 1.5 கிலோ இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.80 லட்சம் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க:பூனையைத் துரத்தி கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தை! வனத்துறையிடம் இருந்து தப்பியதால் பரபரப்பு!
இதை கைபற்றிய தனிப்படை போலீசார் முகமது பாரூக் கைது செய்து மேலும் விசாரித்தனர். அப்போது இந்த போதைப் பொருளை தாய்லாந்து நாட்டிற்கு சென்று வாங்கி வரும்படி சென்னையைச் சேர்ந்த இரண்டு பேர் தன்னை குருவியாக தாய்லாந்து நாட்டுக்கு அனுப்பி வைத்ததாகவும். பின் அவர்கள் முகமது பாரூக்கை நேரடியாக சென்னை வராமல் டெல்லி வழியாக சென்னைக்கு வரும்படி கூறியதாக விசாரணையில் முகமது பாரூக் கூறியுள்ளார்.
பின், கைது செய்யப்பட்ட முகமது பாரூக் செல்போனை ஆய்வு செய்தபோது அவருடைய செல்போனிலிருந்து இரண்டு பேரிடம் தொடர்ச்சியாக பேசி இருந்தது தெரியவந்துள்ளது. அந்த செல்போன் எண்களுடன் தனிப்படை போலீசார் முகமது பாரூக்கை தொடர்பு கொண்டு பேசி வைத்து சென்னை விமான நிலையத்துக்கு வரவழைத்தனர்.
அதன்படி பாருக் அவர்களுடன் தொடர்பு கொண்டு பேசியதும், சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த முகமது யூசுப், அருண் ஆகிய இரண்டு பேர் சென்னை விமான நிலையத்திற்கு வந்தனர். அங்கு சாதாரண உடையில் நின்று கண்காணித்துக் கொண்டிருந்த தனிப்படை போலீசார் அவர்களையும் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு பேரிடம் விசாரித்தபோது இந்த கஞ்சா அதிக போதை உடையது. மிகவும் விலை உயர்ந்தது. கல்லூரி மாணவர்கள், ஐடி ஊழியர்கள் இந்த கஞ்சா போதையை பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. மேலும் அவர்களுக்கு விற்பனை செய்வதற்காக இவை கடத்திக் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து தனிப்படை போலீசார் கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் சென்னை மாநகர காவல் ஆணையரக அலுவலகம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்.