திருநெல்வேலி : 2026 சட்டமன்றத் தேர்தலை மையமாக வைத்து மாவட்டம் தோறும் மூத்த நிர்வாகிகளை வைத்து அதிமுக சார்பில் கள ஆய்வு கூட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், திருநெல்வேலி மாவட்ட அதிமுக கள ஆய்வு கூட்டம் உடையார்பட்டியில் உள்ள மண்டபத்தில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி.வேலுமணி மற்றும் வரகூர் அருணாச்சலம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் பாப்புலர் முத்தையா பேசும்போது, "கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடியா, எதிர்க்கட்சித் தலைவர் ராகுலா என்று இருந்தாலும் நமது வாக்கு வங்கி எங்கு சிதறியது என்பதை பார்க்க வேண்டும். திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சிக்கு கீழே ஓட்டு வாங்கினோம்.
நாம் களப்பணி ஆற்றவில்லை. வாக்காளர் முகாம் நடந்தபோது மாவட்டச் செயலாளர் தச்சை கணேசராஜா ஊரில் இல்லை. ஒரு வட்ட செயலாளரை கூட பார்க்க முடியவில்லை என மாவட்ட செயலாளரை குறை கூறும் வகையில் பேசினார்.
இதனால் ஆத்திரமடைந்த மாவட்டச் செயலாளர் தச்சை கணேசராஜா மேடையில் வைத்து நேரடியாக பாப்புலர் முத்தையாவிடம் வாக்குவாதம் செய்தார். இதையடுத்து தச்சை கணேசராஜா ஆதரவாளர்கள் மேடையை நோக்கி வாக்குவாதம் செய்தனர்.
இதையும் படிங்க : 'வீட்டு வேலைக்கு சென்று கல்லூரிக்கு அனுப்பும் பெற்றோர்'.. மாணவர் கொலை வழக்கில் சென்னை ஐகோர்ட் வேதனை!
பதிலுக்கு பாப்புலர் முத்தையா ஆதரவாளர்களும் வாக்குவாதம் செய்ததால் இருதரப்புக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. அப்போது மேடைக்கு ஏறிய தொண்டர் ஒருவரை மாவட்டச் செயலாளர் கீழே தள்ளி, இருதரப்பும் மேடைக்கு முன் பயங்கரமாக மோதி கொண்டனர். ஒருவரை ஒருவர் கீழே தள்ளி தாக்கிக் கொண்டனர். இதனால் கூட்டத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. இரு தரப்பும் தாக்கிக்கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இவையனைத்தும் மேடையில் இருந்தபடி பார்த்து கொண்டிருந்த எஸ்.பி வேலுமணி உடனடியாக மைக்கில் பேசி இருதரப்பையும் சமாதானப்படுத்தினார். சுமார் 10 நிமிடம் நடந்த மோதல் முடிவுக்கு வந்தது. பின்னர் பிரச்சனை செய்த நபர்களை மட்டும் மண்டபத்தில் இருந்து வெளியேற்றிய பின் மீண்டும் கூட்டம் தொடங்கியது. அதிமுக மூத்த நிர்வாகிகள் முன்னிலையில், நிர்வாகிகள் மோதி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்