ராணிப்பேட்டை: காவேரிப்பாக்கம் அடுத்த சுமைதாங்கி அருகே உள்ள அத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தேசம் கட்சியின் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளராக இருப்பவர் விவேகானந்தன்(38). இவர், நேற்றிரவு (பிப்.1) வாலாஜாபேட்டையில் இருந்து காவேரிப்பாக்கம் நோக்கி சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்துள்ளார்.
அப்போது, காரில் வந்த மர்ம நபர்கள் விவேகானந்தனை வழிமறித்து அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து அங்கிருந்து தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவேரிப்பாக்கம் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட விவேகானந்தனின் உடலை மீட்டு, உடற்கூராய்விற்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், விவேகானந்தனின் உறவினர்கள் மற்றும் மக்கள் தேசம் கட்சியினர் விவேகானந்தனை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க:சாத்தான்குளம் கொலை வழக்கு; இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மதுரைக்கிளை உத்தரவு!