வேலூர்:தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வருகிற 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் வாக்குப்பதிவு நாள் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் அனல் பறக்கத் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோன்று அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான விளம்பர பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. வாக்கு சேகரிக்கும் வகையில், வாக்குறுதிகளை அச்சிட்டு துண்டுப் பிரசுரங்களாக பொதுமக்களிடம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ஒவ்வொரு கட்சியினரும், தங்களது கட்சியின் விளம்பர பிரச்சார பாடல்கள் மூலமாகவும் வாக்கு சேகரித்து வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் எதிர்க்கட்சியை குறிவைத்து போஸ்டர்களும் ஒட்டப்பட்டது.
அந்த வகையில் தற்போது, வேலூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பிரதமர் மோடி புகைப்படத்துடன், ஜி PAY ஸ்கேன் பண்ணுங்க ஸ்கேம் பாருங்க என்ற வாசகங்களுடன், கியூ ஆர் கோட்(QR) போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டர்களில் மோடி உருவத்துடன் இருக்கும் QR கோடை ஸ்கேன் செய்தால், பாஜகவின் ஊழல்கள் என ஒரு வாய்ஸ் ஓவர் உடன் கூடிய வீடியோ ஓடத் தொடங்குகிறது. அதில், பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்தில் மக்களுக்கு வாக்குறுதிகளை கொடுத்து நிறைவேற்றாததை ஒலிபெருக்கியின் மூலம் ஒளிபரப்பாகிறது.
அந்த வீடியோவில்,"கருப்பு பணத்தை மீட்டு ஏழை எளிய மக்களின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் கொடுப்பதாக சொன்னார்கள். ஆனால் அது என்னாச்சு? பாஜக செய்யும் வசூல் தான் அதிகமாகி உள்ளது. 2019 முதல் தேர்தல் பத்திரங்கள் மூலமாக 1,300 நிறுவனங்கள் மற்றும் தனியார் நபர்களிடமிருந்து 6 ஆயிரம் கோடியை நூதன முறையில் பாஜக வசூல் செய்துள்ளது.