தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரியார் பல்கலை கூடுதல் பொறுப்பிற்கு செலவழித்த ரூ.50 லட்சத்தை பல்கலை நிதியில் சேர்க்க கோரிக்கை! -ஆசிரியர்கள் சங்கம் - periyar University issue - PERIYAR UNIVERSITY ISSUE

periyar University teachers association petition: பல்கலை கூடுதல் பொறுப்பிற்கு செலவழித்த 50 லட்சம் ரூபாயை மீண்டும் பல்கலை நிதியில் சேர்க்க பெரியார் பல்கலை ஆசிரியர்கள் சங்கம் துணைவேந்தர் ஜெகநாதனுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

சேலம் பெரியார் பல்கலைக்கழகம்
சேலம் பெரியார் பல்கலைக்கழகம் (credits-ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 15, 2024, 5:41 PM IST

சேலம்:சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல் மற்றும் தேர்வாணையர் கதிரவன் ஆகியோருக்கு முழு கூடுதல் பொறுப்பிற்காகச் செலவழித்த 50 லட்ச ரூபாய் குறித்து உரிய விசாரணை நடத்தி அதை மீண்டும் பல்கலைக்கழக நிதியில் சேர்க்க பெரியார் பல்கலை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் வைத்தியநாதன் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "சேலம் பெரியார் பல்கலைக்கழக தேர்வு ஆணையராக இருப்பவர் உளவியல் துறை பேராசிரியரும் துறைத் தலைவருமான கதிரவன் .அதேபோல பதிவாளர் பொறுப்பில் இருந்து பணி ஓய்வு பெற்றவர் தங்கவேல். இவர்களுக்கு துறைத் தலைவர் பணிக்காக மாதம் இரண்டு லட்சம் ஊதியம் வழங்கப்படுகிறது. அதைத்தவிர முழு கூடுதல் பொறுப்பிற்காக ஆண்டிற்கு நான்கு லட்சம் ரூபாய் வரை ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.

இதனால் சுமார் 50 லட்சம் ரூபாய் பல்கலைக்கழக நிதியானது கூடுதல் பொறுப்பிற்காக வீணடிக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் கதிரவன் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக தேர்வாணையர் முழு கூடுதல் பொறுப்பில் இருந்து வருகிறார் .இந்த பொறுப்பானது ஒரு குறிப்பிட்ட தவிர்க்க முடியாத அசாதாரண நிலைக்கு மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும். அதுவும் தற்காலிகமாக மூன்று மாதங்கள் வரை மாற்று ஏற்பாடு செய்வதற்காக நியமிக்கலாம் . நிரந்தர தேர்வாணையர் என்பது மூன்று ஆண்டுகால பணியாகும் .இது விண்ணப்பித்து நேர்காணல் நடத்தி தேர்வு செய்ய வேண்டிய பதவி ஆகும் .ஆனால் இந்தப் பதவியினை இன்று வரை துணைவேந்தர் நியமிக்கவில்லை.

தேர்வாணையர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களை தேர்வு செய்யாமல் இவரைத் துணைவேந்தர் மீண்டும் அனுமதித்தது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. இவர் பணிக்காலத்தில்தான் பட்டியலின சாதியைப் பற்றி கேள்விகள் கேட்டது, விடைத்தாள் கொள்முதலில் முறைகேடு என்பது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.மேலும் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு விடைத்தாள் திருத்தும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக பேராசிரியர்கள் இணைவு பெற்ற கல்லூரிகளில் தேர்வுகளை கண்காணிக்க கூடுதல் முதன்மை கண்காணிப்பாளராக செல்வது நடைமுறையில் இருந்தது . அதை அப்புறப்படுத்தி விட்டு பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர் பணி வழங்கப்படுவது இல்லை. பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களை தேர்வு விடைத்தாளினை வண்டியில் இருந்து ஏற்றவும் இறக்கவும் பயன்படுத்தி மாணவர்களை பல்வேறு துன்பங்களுக்கு ஆளாக்கி வருகிறார்.

மேலும் அவர்களின் பணிக்கான ஊதியமும் முறையாக வழங்கப்படுவது இல்லை. மேலும் சுழற்சி முறையில் தேர்வு கண்காணிப்பாளர் பொறுப்பு வழங்கினால் பல்கலைக்கழகத்திற்கு வருமான இழப்பு ஏற்படுவது தவிர்க்கப்பட்டு இருக்கும். அப்படி செய்யாமல் துணைவேந்தர் ஜெகநாதன் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கதிரவனை முழு கூடுதல் பொறுப்பிற்காக நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நியமித்து இருப்பதால் முழு கூடுதல் பொறுப்பிற்கு பேராசிரியருக்கான ஊதியத்துடன் கூடுதல் பொறுப்பிற்காக ஒரு வருடத்திற்கு சுமார் 4 லட்சம் வீதம் மிகை ஊதியம் பெற்று வருகிறார்.

இதனால் பல்கலைக்கழகத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிதி இழப்பினை ஏற்படுத்தி உள்ளார் .எனவே தமிழக அரசும் உள்ளாட்சி நிதி துறையும் இதில் தலையிட்டு கூடுதல் ஊதியம் பெற்றதை திரும்ப பல்கலைக்கழக நிதியில் சேர்க்க வேண்டும் .அரசு ஒரு விசாரணை குழுவினை நியமித்து இது குறித்து விசாரிக்கவும் வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க:எஸ்.ஆர்.எம் ஹோட்டல் விவகாரம்; ரூ.38 கோடி நிலுவை - சுற்றுலாத்துறை தகவல்!

ABOUT THE AUTHOR

...view details