திருப்பூர் புத்தகக் கண்காட்சி திருப்பூர்: ஃப்ரண்ட்லைன் பள்ளி சார்பில், அப்பள்ளியின் 25வது ஆண்டு விழாவினையொட்டி, உலக சாதனைக்காக 135 மாணவர்கள் பல்வேறு புத்தகங்களை எழுதி சாதனை படைத்துள்ளனர். இதில் கதைகள், நாவல், புலனாய்வு, இலக்கியம், அறிவியல், வர்த்தகம், மருத்துவ ஆய்வு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் புத்தகங்களை மாணவர்களே எழுதி வெளியிட்டிருந்தனர்.
அவற்றை தமிழன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ், இண்டியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், ஆசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் உலக சாதனையாக பதிவு செய்து அங்கீகரித்துள்ளன.
இந்த நிலையில், ஃப்ரண்ட்லைன் பள்ளி மாணவர்கள் உலக சாதனைக்காக எழுதி வெளியிட்ட புத்தகங்கள், திருப்பூர் புத்தகக் கண்காட்சி அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. இவற்றை புத்தகக் கண்காட்சிக்கு வரும் மாணவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பார்வையிட்டு, புத்தகங்களைப் பற்றி கேட்டறிந்து வாங்கிச் சென்றனர்.
இது குறித்து பள்ளி தாளாளர் சிவசாமி கூறுகையில், "பெரும் பதிப்பகங்களின் ஸ்டால்களுக்கு இடையில், ஃப்ரண்ட்லைன் பள்ளிக் குழந்தைகளின் புத்தகங்கள் கூறும் கருத்துகள் மிகவும் உயர் சிந்தனை கொண்டாதாகவே இருக்கிறது.
மேலும், பள்ளிக் குழந்தைகளின் சிறப்பான எழுத்து நடை, வடிவமைப்பு, கதையாடல், நேர்த்தி போன்றவற்றை அனைவரும் பாராட்டினர். 135 பேர் 135 புத்தகங்களை எழுதி உலக சாதனை படைத்துள்ளதுடன், அந்த புத்தகங்கள் புத்தகக் கண்காட்சியில் வரவேற்பு பெற்றுள்ளன" என்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.
இது குறித்து, புத்தகம் எழுதி காட்சிப்படுத்தி இருந்த மாணவிகள் கூறுகையில், "புத்தகங்களை நாங்களே சொந்த முயற்சியில் எழுதியது மகிழ்ச்சியாக இருந்தது. பள்ளி ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களுடன் 135 பேர்m 135 புத்தகங்களை வெளியிட்டு உலக சாதனை படைத்துள்ளோம். பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்" என்றனர்.
புத்தகக் கண்காட்சிக்கு வந்த வாசகர் தோனி கூறுகையில், "ஃப்ரண்டலைன் பள்ளியின் மாணவர்கள் 135 பேர் 6 மாத காலக்கட்டத்தில் 135 புத்தகங்கள் எழுதி வெளியிட்டு, அதை கண்காட்சியில் காட்சிப்படுத்தி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அனைத்து விதமான கதைகளையும், இதில் உள்ளன இளைய தலைமுறையினர் புத்தகம் வாசிப்பு மற்றும் படிப்பதில் ஆர்வம் காட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:"குடியரசு தினத்தில் மாவட்ட ஆட்சியர் விருதுகளுக்கு அரசாணை இல்லை" ஆர்டிஐ மூலம் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!