திருவாரூர்:கொரடாச்சேரி பத்தூர் சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் பாலா - சுதா தம்பதி. பாலா மெக்கானிக்காகவும், சுதா இல்லத்தரசியாகவும் உள்ளனர். இவர்களது மகள் துர்க்கா தேவி, கொரடாச்சேரி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில், நடந்து முடிந்த 10ஆம் வகுப்பு பொது தேர்வில் 500க்கு 492 மதிப்பெண்கள் எடுத்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
மாணவி துர்க்கா தேவி, பாட்டி கமலம், எம்.எல்.ஏபூண்டி கலைவாணன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) இது குறித்து அவர் ஊடகத்திற்கு பேட்டியளித்தபோது, கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது வீட்டில் மின்சார வசதி இல்லாத நிலையில், செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தை பயன்படுத்தியே படித்து இந்த மதிப்பெண்ணை பெற்றதாக அவர் தெரிவித்திருந்தார்.
இந்த செய்தி ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், திருவாரூர் மின்வாரிய அதிகாரிகள் ஆகியோர் மாணவியின் வீட்டிற்கு நேரில் சென்று ஆய்வு செய்து, மூன்று மின் கம்பங்களை நட்டு, இரண்டு மின் விளக்குகள் மற்றும் மின் விசிறியுடன் கூடிய இலவச மின் இணைப்பினை அளித்துள்ளனர்.
தொடர்ந்து பேசிய பூண்டி கலைவாணன், “வீட்டில் மின் விளக்கு இல்லாத ஒரு சூழலில் தான் நான் கல்வி பயின்றேன். அதனால் தான் நல்ல மதிப்பெண் எடுக்க முடியவில்லை என வருத்தத்துடன் கூறினார். உடனடியாக மின்சாரம் கிடைப்பதற்கான அனைத்து வழிகளும் ஏற்பாடு செய்து 2 நாட்களுக்குள் அவரது வீட்டிற்கு மின்சாரம் வழங்கப்பட்டது” என கூறினார்.
இது குறித்து மாணவி கூறுகையில், “நான் செல்போன் டார்ச் லைட் விளக்கில் படித்து 500க்கு 492 மதிப்பெண்கள் எடுத்துள்ளேன், தற்போது எனது வீட்டிற்கு இலவச மின் இணைப்பு கொடுத்துள்ளனர். இதன் காரணமாக 12ஆம் வகுப்பில் சிறப்பாக படித்துஅதிக மதிப்பெண்களைப் பெறுவேன். எனது லட்சியமான டாக்டர் கனவையும் எட்டுவேன்” என்று தெரிவித்தார்.
இது குறித்து அவரது பாட்டி கமலம் கூறுகையில், “என் பேத்தி இவ்வளவு மதிப்பெண் பெறுவார் என எதிர்பார்க்கவே இல்லை. இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவிற்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
இதையும் படிங்க: பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கமகம பிரியாணி விருந்து.. நெற்குன்றம் கவுன்சிலர் அசத்தல்! - Nerkundram Councilor Biryani