மயிலாடுதுறை: சென்னை திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (59) என்பவர் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் மத்திய பொதுப்பணித்துறை (CPWD) செயற்பொறியாளராக பணியில் உள்ளார். காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு சாலையில் யூனிகான் டவர் என்ற குடியிருப்பு வளாகத்தில் தனி வீடு எடுத்து தங்கியுள்ளார்.
திருமணத்தை மீறிய உறவு:மேலும், தனிமையில் இருக்கும் இவருக்கு, புரோக்கர் ஒருவர் மூலமாக மயிலாடுதுறை மாவட்டம் சீனிவாசபுரம் கம்பர் தெருவைச் சேர்ந்த ஐயப்பன் என்பவரது மனைவி சுபாஷினி (40) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டதாகவும்; இதனால், கடந்த 6 மாதங்களாக இவர்கள் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வெங்கடேசன் ஒவ்வொரு முறையும் காரைக்காலுக்கு செல்லும்போதெல்லாம் தனது குடும்ப வறுமையை காரணம் காட்டி சுபாஷினி, வெங்கடேசனிடம் இருந்து சிறுக சிறுக பணம் பெற்றுள்ளார். இந்த சூழலில், இருவரும் தனிமையில் இருந்ததை கடந்த மாதம் 27ஆம் தேதி வெங்கடேசனுக்குத் தெரியாமல் சுபாஷினி தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
கத்திமுனையில் மிரட்டி பணம் பறிப்பு:இதன் பின்னர், கடந்த மாதம் 29ஆம் தேதி வெங்கடேசனை மயிலாடுதுறை காவேரி நகர்ப் பகுதியில் உள்ள தனியார் விடுதிக்கு வரவழைத்த சுபாஷினி, மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் மாநில இளைஞரணி துணை செயலாளரான மயிலாடுதுறையைச் சேர்ந்த கில்லி பிரகாஷ் (40) என்பவருக்குத் தகவல் தெரிவித்து, அவரையும் தனியார் விடுதிக்கு வரவழைத்துள்ளார்.
இதனை அடுத்து, கில்லி பிரகாஷின் கூட்டாளிகளான முகமது நசீர்(39) மற்றும் தினேஷ் பாபு(31) ஆகியோருடன் வந்த கில்லி பிரகாஷ் சுபாஷினியுடன் இணைந்து வெங்கடேசனின் கழுத்தில் கத்தியை வைத்து பணம் கேட்டு மிரட்டியதாக தெரியவருகிறது. அப்போது வெங்கடேசனிடம் இருந்து ஏடிஎம் கார்டு (ATM Card) மற்றும் ஜிபே (Gpay) மூலம் ரூ.2.70 லட்சத்தை பறித்ததாகக் கூறப்படுகிறது.
போலீசில் புகார்:இதுமட்டும் அல்லாது, சுபாஷினியுடன், வெங்கடேசன் தனிமையில் இருந்த வீடியோவை வெளியிடாமல் இருப்பதற்காக கூடுதலாக ரூ.10 லட்சம் தர வேண்டும் என கூறி மிரட்டல் விடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இச்சம்பவம் குறித்து வெங்கடேசன் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
4 பேர் கைது:வெங்கடேசன் கொடுத்த புகாரின் அடிப்படையில், சுபாஷினி, கில்லி பிரகாஷ் மற்றும் அவரது கூட்டாளிகளான முகமது நசீர், தினேஷ் பாபு உள்ளிட்ட நான்கு பேரையும் இந்திய தண்டனைச் சட்டம் (IPC) 294 (b), 352, 307, 386, 506(ii) உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு (எப்ஐஆர் நம்பர் 279/2024) செய்து கைது செய்தனர்.
பின்னர், அவர்களை மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஆண் குற்றவாளிகள் மூவரையும் மயிலாடுதுறை கிளை சிறையிலும், சுபாஷினியை திருவாரூர் சிறையிலும் அடைத்தனர். மேலும், கைது செய்யப்பட்ட கில்லி பிரகாஷ் 2011ஆம் ஆண்டு முதல் சரித்திரப்பதிவேடு குற்றவாளி பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:அரசுப் பெண்கள் விடுதியில் நள்ளிரவில் புகுந்த திருடன்.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்!