கோயம்புத்தூர்:கோயம்புத்தூர் நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரி கலையரங்கில் இ.பி.ஜி. அறக்கட்டளை சார்பில், "பெண்களை அதிகாரமூட்டல், சமூகம் வளர்த்தல்" என்ற இ.பி.ஜி., சமூக நவீனமைப்பு மாநாடு-2024 நடைபெற்றது. இது அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் பாலகுருசாமியால் நடத்தப்படுகிறது. இம்மாநாட்டிற்கு பாலகுருசாமி தலைமை வகித்தார்.
பல்வேறு கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க வேண்டும்: இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய பாலகுருசாமி, "சுதந்திரம் அடைந்தும் இன்னும் நம்நாடு வளர்ந்து வரும் நாடாகவே தான் இருக்கிறது. இந்தியா வளர்ந்த நாடக மாறுவதற்கு பொருளாதர முன்னேற்றம் மட்டுமின்றி சமூக முன்னேற்றமும் வேண்டும். பெண்கள் முன்னேற்றம் என்பது மிக மிக அவசியம். அதனை கருத்தில் கொண்டே இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சியில் பெண்களுக்கும் சம பங்கு உண்டு என தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "முதல்முறையாக இந்த நிகழ்வை நடத்துகிறோம். ஒவ்வொரு வருடமும் இது போன்று நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். இதன் முக்கிய நோக்கம் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க வேண்டும். கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பதற்கான எண்ணத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதுதான். ஒரு நாடு வளர்ச்சி அடைய வேண்டுமென்றால் மக்கள் பல்வேறு படைப்புகளை கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க வேண்டும்.
அதிகமான தயாரிப்புகளை கொடுக்கும் பொழுது தான் நாடு வளர்ச்சி அடையும் என்று நம்புகிறேன். புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பது என்பது மாணவர் பருவத்திலேயே வரவேண்டும். பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு பல்வேறு படைப்புகளை படைப்பதற்கான செயல்களை செய்ய வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் வளர்ந்து வரும் பொழுது பல்வேறு கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பார்கள். நாட்டிற்கான சேவைகளை அவர்களால் செய்ய முடியும்.இது போன்ற நிகழ்வுகளில் ஜெயிக்க வேண்டும் என்பது முக்கியமல்ல. அதில் பங்கேற்க வேண்டும் என்பதே முக்கியம். அதுவே அவர்களது திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான முதல் படியாக இருக்கும்” என்றார்.
ஆளுநர், அமைச்சர் இணைந்து செயலாற்ற வேண்டும்:சமீப காலங்களில் ஆளுநர் பங்கேற்கும் கல்வி நிகழ்ச்சிகளில் உயர்கல்வித்துறை அமைச்சர் பங்கேற்காமல் புறக்கணிக்கும் நிகழ்வுகள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், அது போன்ற நிகழ்வுகள் வருந்தத்தக்கது. இது போன்ற கல்வி நிகழ்வுகளில் இருவரும் இணைந்து செயலாற்ற வேண்டும்.
கல்வியில் தமிழ்நாடு முதலிடம்: இருவரும் பிறர்க்கு ரோல் மாடலாக இருக்க வேண்டும். துரதிஷ்டவசமாக தமிழ்நாட்டில் கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளாக இது போன்று நடைபெறவில்லை. அது அரசுக்கும், ஆளுநருக்கும் இடையிலான ஈகோ க்ளாஸ். இவற்றையெல்லாம் தவிர்த்து விட்டு மாணவர்களின் நலன் மற்றும் எதிர்காலத்தை கருதி இருவரும் இணைந்து கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கல்வியில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம் என்று சொல்லும் பொழுது பெருமையாக இருக்கிறது.