பெண்கள் பெண்ணியம் என்ற பெயரில் தங்கள் திறமைகளை மறந்து விடக்கூடாது சென்னை: சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சுதா சேஷையன், பெண்கள் முன்னேற்றம் குறித்து ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், "தன்னைப் பொறுத்தவரை பெண்களிடம் நிறைய திறமைகள் இருக்கிறது.
ஒவ்வொரு பெண்ணிடமும் ஏதாவது ஒரு திறமை இருக்கும். பெண்ணியம் என்ற பெயரில் அவர்கள் திறமைகளை மறந்து விடக்கூடாது, பெண்கள் தங்களிடம் உள்ள திறமையைக் கண்டறிந்து, அதனை மேம்படுத்தி அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் செயல்படுத்தினால் சிறந்ததாக இருக்கும்.
சாதாரணமாகவே பெண்களிடம் வித்தியாசமாக சிந்திக்கும் திறமையும், செயல்களை நேர்த்தியாகவும், துல்லியமாகவும் செய்யும் மனோபாவமும் இருக்கும். மேலும், அவர்களிடம் சாப்ட் ஸ்கில், மல்டி டாஸ்கிங் திறன்களும் அதிகமாக இருக்கும். இன்றைய உலகில் இதே போன்ற திறன்கள் அதிகம் தேவைப்படுகின்றன. மல்டி நேஷனல் கம்பெனிகளில் மனித வள மேலாண்மைத் துறையில் பெண்களை தலைமை பொறுப்புகளில் அமர்த்துகின்றனர்.
நிலையான, நிரந்தரமான வளர்ச்சிக்கு பெண்களிடம் உள்ள திறன்கள் பணிகளைத் துல்லியமாகச் செய்தல் போன்றவற்றை வைத்துக் கொண்டு, அவர்கள் வளர்வதுடன், மற்றவர்களையும் வளர்க்க வேண்டும். பெண்களின் முன்னேற்றத்திற்கு கல்வி அதிகம் தேவைப்படுகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்தியா மட்டுமின்றி, உலக அளவிலும் பெண்கள் கல்வி கற்பதில் பல சிக்கல்கள் இருந்தன.
அதில் தற்போது நிறைய மாற்றங்கள் வந்துள்ளன, பல துறைகளில் பெண்கள் பெரிய பொறுப்புகளை வகிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளனர். பொது வாழ்க்கையில் ஒரு பெண் செயல்படும்போது அவர்களுக்கு நிறைய ஆதரவுகள் தேவைப்படும்.
வீட்டில் உள்ளவர்களின் ஆதரவும், சமுதாயத்தின் ஆதரவும் அவர்களுக்குத் தேவைப்படும். அந்த ஆதரவை பெண்களுக்கு வழங்க வேண்டும். பெண்களுக்கு நிறைய சவால்கள் இருக்கத்தான் செய்யும். ஒரு துறையில் பெண் முன்னணியில் இருந்தால், அவர் மீது அவதூறு பரப்பக்கூடிய நிலைமை இன்றும் இருக்கிறது. எதிர்காலத்திலும் இருக்கத்தான் செய்யும்.
அது போன்ற சூழ்நிலை இனி இல்லை எனக் கூற முடியாது, அவ்வாறு நடக்காமல் இருந்தால் மிகவும் நல்லது. பெண்களின் மனசாட்சி தெளிவாக இருக்கும் என்று சொன்னால், உங்களைக் குறித்து மற்றவர்கள் பேசும் அவதூறுகளைப் பற்றி கவலைப்படாதீர்கள். பெண்களிடம் இருக்கக்கூடிய ஒரு பலவீனம், மற்றவர்கள் தங்களை அங்கீகாரம் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது, அதுபோன்ற எதிர்பார்ப்பு இல்லாமல் நீங்கள் சரியாக இருக்கும் வரை மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.
பெண்கள் நிறைய சிக்கல்கள், பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. பெண்கள் மட்டுமின்றி, யாராக இருந்தாலும் பயணம் முன்னேறிச் செல்லும்போது வாழ்க்கையில் சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால், பெண்களிடம் பிரச்னைகளுக்கு வித்தியாசமான, எளிமையான தீர்வைக் கூற முடியும். பெண்கள் நேர்மறையான முறையில் அவுட் ஆப் தி பாக்ஸ் மூலம் தீர்வுகளைக் காண வேண்டும் என்பது எனது ஆசை, அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:மதிமுக பம்பரம் சின்னம் தொடர்பான வழக்கு; தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!