கோயம்புத்தூர்: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ். பி.வேலுமணி உட்பட அக்கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் திமுக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி (Video Credits - ETV Bharat Tamilnadu) அப்போது பேசிய எஸ்.பி.வேலுமணி, "இந்த ஆர்ப்பாட்டம் அப்பாவி மக்களுக்கானது, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கஞ்சா விற்பனை, கள்ளச்சாராய விற்பனை அதிகரித்துவிட்டது. இதன் பின்னணியில் யார் என்பது வெளியில் வர வேண்டும். மெத்தனால் போன்ற மூலப்பொருட்கள் ஆந்திராவில் இருந்து வந்திருக்கிறது.
கள்ளச்சாராயம் விற்ற விவகாரத்தில் காவல்துறையினரின் கையை கட்டி போட்டது யார்? இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும். இல்லையெனில் அதனை நீதிமன்றம் செய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதிமுக ஆட்சியில் காவல் துறையினர் சுயமாக செயல்பட்டனர், சுயமாக செயல்பட்டால் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்காது.
மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்களுக்கு தேவையான அனைத்து மருந்துவ உதவிகளையும் சரியான முறையில் செய்து தர வேண்டும். எப்போது தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க அதிமுகவினர் தயாராக உள்ளனர். மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைக்கும்" என்று எஸ்.பி.வேலுமணி பேசினார்.
ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.பி.வேலுமணி, "கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 19ஆம் தேதி கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்துள்ளனர். இதற்கு சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் முதன்முதலாக நேரடியாக சென்று ஆறுதல் கூறி மக்களை சந்தித்தவர் எடப்பாடி பழனிசாமி தான். பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என குரல் எழுப்பி இருக்கிறார்.
நியாயமாக நடந்து உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும். சட்டமன்றத்தில் பேச அனுமதிக்காத காரணத்தால் ஊடகங்கள் மூலம் வெளியே சொன்னோம். அதிமுக ஆட்சியில் பல பிரச்சனைகள் வந்தபோது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
2023ஆம் ஆண்டு பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தபோதே, இந்த அரசு நடவடிக்கைகள் எடுக்க வில்லை. அப்போதே நடவடிக்கைகள் எடுத்து இருந்தால், கள்ளக்குறிச்சி சம்பவத்தை தவிர்த்து இருக்கலாம். இனியாவது அரசு இந்த விவகாரத்தில் தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" என்று எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
இதையும் படிங்க:கள்ளச்சாராய விவகாரம்; ஆளுநர் ரவியை சந்தித்து புகார் மனு அளித்த அண்ணாமலை!