சேலம்:பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்று முடிவு செய்து விலகி வந்துவிட்டோம், எங்களுக்கு எதற்குக் கள்ள உறவு? என அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் வைகைச்செல்வன் பேசியுள்ளார். சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வைகைச் செல்வன் இன்று (ஏப்.14) நேரில் சந்தித்தார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “பாஜகவுடன் அதிமுகவிற்கு எந்த தொடர்பும் இல்லை, அதிமுக தனித்து இயக்குகின்ற மகத்தான மக்கள் இயக்கம், அதிமுகவிற்கு ஏழு முறை ஆட்சி அதிகாரத்தை மக்கள் வழங்கினர். தற்போது எதிர்க்கட்சியாகவும் சிறப்பாக பணியாற்றி வருகிறது என்பதை மீண்டும் மீண்டும் முதலமைச்சருக்குத் தெளிவுபடுத்துகிறோம்.
எங்களுக்கு எதற்குக் கள்ள உறவு? கடந்த 2014, 2021 ஆகியவற்றில் நல்ல உறவாக பாஜகவுடன் கூட்டணி தொடர்ந்த நிலையில், தற்போது பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்று முடிவு செய்து விலகி வந்துவிட்டோம். மேலும் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதில் பல்வேறு சர்ச்சைகள் உள்ளது, அது குறித்துத் தேர்தலுக்குப் பிறகு முழுமையான கருத்தை அதிமுக பொதுச்செயலாளர் தெரிவிப்பார்.
பாஜக பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை என்று தான் பார்க்க வேண்டும். தமிழகத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்ட போதெல்லாம் வராத பிரதமர் மோடி, தற்போது வருகிறார் என்றால் வாக்கு அரசியலுக்குத் தான் வருகிறார். வாக்கு அரசியலுக்கான தேர்தல் அறிக்கை என்பது தான் பாஜகவின் தேர்தல் அறிக்கை என பார்க்க வேண்டும்.