வேலூர்: பெண்களின் முன்னேற்றத்திற்கு ஒவ்வொரு ஆணும் துணை நிற்க வேண்டும் என்று இந்திய பெண்கள் கூடைப்பந்து அணியின் முன்னாள் கேப்டன் அனிதா பால்துரை கூறினார்.
வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ரிவேரா கலை மற்றும் விளையாட்டு திருவிழாவானது இன்று துவங்கியது. ரிவேரா கலை விளையாட்டு திருவிழா என்பது சர்வதேச கலை மற்றும் கலாச்சார திருவிழா ஆகும். 4 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் துவக்கமாக உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி, மாரத்தான் ஓட்ட போட்டியானது இன்று நடைபெற்றது. இதனை வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர் சங்கர் தலைமையில் நடந்தது.
இவ்விழாவில் இந்திய பெண்கள் கூடைப்பந்து அணியின் முன்னாள் கேப்டன் அனிதா பால்துரை கொடியினை ஏற்றி வைத்து புறாக்களை பறக்கவிட்டு, ரிவேரா கலை விளையாட்டு திருவிழாவினை துவக்கி வைத்தார். 23வது ஆண்டாக நடைபெறும் இந்த ரிவேரா கலை மற்றும் விளையாட்டு திருவிழாவில் 26 நாடுகளிலிருந்து 80 பல்கலைகழகங்கள், கல்லூரிகளைச் சேர்ந்த 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மணவிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இவ்விழாவில் இந்திய கூடைப்பந்து பெண்கள் அணி முன்னாள் கேப்டன் அனிதா பால்துரை பேசுகையில், ”19 ஆண்டு காலமாக நான் இந்திய கூடைப்பந்து அணிக்காக விளையாடி, பல பதக்கங்களை பெற்றுள்ளேன். அதற்காக இந்திய அரசு பத்மஸ்ரீ விருதும் வழங்கி கௌரவித்தனர். இதற்கு காரணம் நாம் நம் இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும். எவ்வாறு செய்தால் நாம் எதிர்பார்த்ததை விட அதிக உயரத்தை அடையலாம் என நினைக்க வேண்டும். நான் தொடர்ந்து 19 ஆண்டுகள் விளையாடினேன். அதற்காக என் கணவரும் என் வெற்றிக்கு பின்னால் நின்றார். அதே போல் ஒவ்வொரு ஆண்களும் பெண்களின் எதிர்காலத்திற்காகவும், வெற்றிக்காகவும் அவர்களுடன் இருந்து அவர்களின் உயர்வுக்கு வழிவகை செய்ய வேண்டுமென" பேசினார்.
இதையும் படிங்க: சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டி: விறுவிறுப்பான ஆட்ட களம்! - VELLORE WHEELCHAIR BASKETBALL
பின்னர் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற மாரத்தான் ஓட்டத்தையும் அனிதா பால்துரை கொடியசைத்து துவக்கி வைத்தார். விஐடி பல்கலைக்கழகத்தில் துவங்கிய மாராத்தான் ஓட்டமானது பிரம்மபுரம், சேவூர், வழியாக கரிகிரி சென்று மீண்டும் விஐடி பல்கலைக்கழகம் வரையில் 9.9 கிலோ மீட்டர் தூரம் ஓடி வந்து மாணவர்கள் நிறைவு செய்தனர்.