சென்னை: இசையமைப்பாளாராக நூறு படங்களை தொட்டுவிட்ட ஜி.வி. பிரகாஷ் குமார் நடிகராகவும் பல படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து இசையமைப்பதையும் நிறுத்தவில்லை. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நிறைய படங்களுக்கு இசையமைத்து வருகிறார் ஜி.வி. பிரகாஷ். 2015ஆம் ஆண்டு ’டார்லிங்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ஜி.வி.பிராகாஷ் குமாருக்கு மார்ச் மாதம் வெளியாகவிருக்கும் ’கிங்ஸ்டன்’ 25வது படம்.
இந்த படத்திற்கான புரோமோஷனில் தனது விவாகரத்தைப் பற்றி பேசியுள்ளார் ஜி.வி.பிரகாஷ் குமார். ஜி.வி.பிரகாஷ் கடந்த வருடம் அவருடைய மனைவி சைந்தவியை விவாகரத்து செய்துள்ளார். பாடகியான சைந்தவியும் ஜி.வி.பிரகாஷும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். விவாகரத்திற்கான காரணத்தை இருவரும் கூறவில்லை.
இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நாங்கள் பிரிகிறோம். ஆனால் நாங்கள் நண்பர்களாக எங்கள் வாழ்க்கையில் தொடர்வோம் என்று பதிவு வெளியிட்டிருந்தனர். அதற்கேற்றாற்போல் பிரிந்தாலும் வேலை என வரும் பொழுது இருவரும் சேர்ந்து பணியாற்றுகிறார்கள்.
இருந்த போதிலும் ஜிவி பிரகாஷ்- சைந்தவி இருவரும் விவாகரத்து செய்துகொள்ள நடிகை திவ்யபாரதி தான் காரணம் என பலரும் சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்பி கிண்டல் செய்து வந்தனர். இந்த வதந்திக்கு முதல் முறையாக ஜி.வி. பிரகாஷ் விளக்கம் கொடுத்துள்ளார். ’கிங்ஸ்டன்’ படத்தின் புரோமோஷனுக்கான பேட்டியில் இந்த வதந்திகளுக்கு மறுப்பு தெரிவித்து பேசியுள்ளார்.
அதில் , ”‘பேச்சிலர்’ திரைப்படத்தில் நாங்கள் இருவரும் இணைந்து நடித்ததால், நாங்கள் இருவரும் டேட்டிங்க் செய்வதாக நிறைய பேர் கூறுகிறார்கள். இதனால் தான் எனக்கும் சைந்தவிக்கும் பிரச்சினை என்றும் சிலர் கூறி வந்தார்கள். அது உண்மை இல்லை. ’பேச்சிலர்’ படத்திற்கு பிறகு நான் திவ்யபாரதியை ’கிங்ஸ்டன்’ படத்தில் தான் பார்த்தேன். படப்பிடிப்பை தவிர வெளியில் நாங்கள் சந்தித்துக் கொண்டது கிடையாது.
திவ்ய பாரதி என்னுடன் வேலை செய்யும் நல்ல நண்பர் மட்டுமே. ஒருவேளை ’பேச்சிலர் படத்தில் எங்களுடைய ஜோடி நன்றாக இருந்ததால் இப்படி பேசுகிறார்கள். அவர்களாக பேசிக்கொள்கிறார்கள்” என்றார். ’பேச்சிலர்’ படத்திற்கு பிறகு மீண்டும் திவ்யபாரதியை ஏன் ’கிங்ஸ்டன்’ படத்திலும் தேர்வு செய்தீர்கள் என்று கேட்கப்பட்டதற்கு, பேச்சுலர் படத்தில் இருந்த விஷுவல் ரொமான்ஸ் எல்லாம் நன்றாக இருந்தது. அதனால் இந்த படத்திலும் திவ்யபாரதி இருந்தால் சரியாக இருக்கும் என்று பட குழு முடிவு செய்தது என்று பதில் கூறினார் ஜிவி பிரகாஷ்.
இதையும் படிங்க: நினைவுகளுக்கு வயதில்லை... 21 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸாகும் சேரனின் ’ஆட்டோகிராஃப்’!
இந்தப் பேட்டியின்போது திவ்யபாரதியும் உடன் இருந்தார். திவ்யபாரதி இதை பற்றி கூறுகையில், “ஒவ்வொரு முறை இது தொடர்பாக செய்திகள் வரும்போது ஜி.வி.பிகாஷுடம் தான் சொல்வேன்.அவர் அதெல்லாம் விடுங்க ஒன்றுமில்லை என சொல்வார். மீடியாவை நம்மால் கட்டுப்படுத்த முடியாது என்பதால் அமைதியாக இருப்பேன். ஜி.வி பிரகாஷும் சைந்தவியும் ஒன்றாக இசை நிகழ்ச்சி செய்த போது மகிழ்ச்சி அடைந்தேன்.
இனிமேல் என்னை எதுவும் சொல்லமாட்டார்கள் என அதன் பிறகும் என்னைதான் திட்டுகிறார்கள். முக்கியமாக பெண்கள் தான் ஏன் இப்படி செய்தீர்கள், அவர்கள் இருவரும் செம ஜோடி, என அதிகம் திட்டுகிறார்கள். கஷ்டமாக இருக்கும். இவரிடம் அதை பற்றி சொன்னால் கண்டு கொள்ளாமல் விட சொல்லிவிடுவார். நான் அவற்றை பார்த்துவிட்டு அப்படியே கடந்து விடுவேன்” என்றார்.
சில மாதங்களுக்கு முன்பே இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு சைந்தவி கோபமாக பதில் அளித்திருந்தார். அதில், “நாங்கள் இருவரும் சில தனிப்பட்ட காரணங்களால் பிரிந்து இருக்கிறோம். ஆனால் ஜிவி பிரகாஷ் உண்மையில் நேர்மையானவர் தான். அவரைப் பற்றி எந்த இடத்திலும் யாரும் தவறாக பேச வேண்டாம் எங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் யாரும் தலையிடாதீர்கள்” என்று பதிவு வெளியிட்டிருந்தார்.
மார்ச் 7-ம் தேதி வெளியாகவுள்ள ‘கிங்ஸ்டன்’ படத்தை கமல் பிரகாஷ் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ், திவ்ய பாரதி, அழகம் பெருமாள், சேத்தன், இளங்கோ குமாரவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்.