சென்னை: தமிழ் சினிமாவின் பேய் படங்களில் மிக வித்தியாசமான படம் ’ஈரம்’ என சொல்லலாம். அந்த படத்திற்கு பிறகு இயக்குநர் அறிவழகன், நடிகர் ஆதி, இசையமைப்பாளர் தமன் என மூவரும் இணைந்துள்ள படம் ’சப்தம்’. இப்படத்தில் ஆதியுடன் லட்சுமி மேனன், சிம்ரன், லைலா, ரெடின் கிங்ஸ்லி, எம்.எஸ்.பாஸ்கர், விவேக் பிரசன்னா, ராஜீவ் மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற பிப்ரவரி 28ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில், சப்தம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
விழாவில் இயக்குனர் அறிவழகன் பேசுகையில், ”ரொம்ப நாள் பிறகு தியேட்டரில் வெளிவரக்கூடிய என்னுடைய படம் 'சப்தம்’. தண்ணீர் மூலமாக ஹாரர் விஷயத்தை ‘ஈரம்’ படத்தில் கொடுத்தோம். அது எல்லராலும் கொண்டாடப்பட்டது. கமர்ஷியலாகவும் வெற்றி பெற்றது. இப்படத்தில் சத்தத்தை வைத்து ஹாரர் படமாக எடுத்துள்ளோம்.
ஈரம் திரைப்படத்தில் தண்ணீர் மூலமாக பேயை காண்பிப்பது என்பது எளிதாக இருந்தது. ஆனால் கண்ணுக்கு தெரியாத சத்தத்தின் மூலம் பேய் வருவதை எப்படி எடுக்கப்போகிறோம் என சவால் இருந்தது. ஸ்கிரிப்ட்டில் மட்டுமல்ல படம் வெளிவரும் வரை இதற்கான உழைப்பு கொடுக்க வேண்டியுள்ளது. நம்முடைய தியேட்டர்களில் ஒலியமையமைப்பு நன்றாக இருக்காது.
எல்லா தியேட்டரிலும் ஒரே மாதிரியான ஒலியமைப்பு இல்லை. அதனால் இந்த படத்தில் சப்தம் மூலமாக நல்ல அனுபவத்தை கொடுக்க முடியாது என நிறைய பேர் என்னிடம் சொன்னார்கள். ஆனால் எல்லா தியேட்டரிலும் அடிப்படையான DTS ஒலியமைப்பு மாறாது. அந்த ஒலியமைப்பை நமது படத்தில் செய்வோம் என அதற்காக மொத்த படக்குழுவும் உழைத்துள்ளோம்.

இந்த படத்திற்கும் மற்ற படங்களுக்கு இருக்கும் வித்தியாசம் என்னவென்றால் என்னை பொறுத்தவரை திரைப்படம் பொழுதுபோக்காக மட்டுமல்லாமல், அதே நேரத்தில் மக்களுக்கு பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும் என நினைப்பேன். அந்தவகையில் சப்தம் திரைப்படம் புதிய அனுபவத்தை கொடுக்கும்.
படம் எடுத்தபின் கதை மிக மெதுவாக நகர்வதாக இயக்குநர்களே கூறி சில காட்சிகளை எடிட் செய்கின்றனர். ஆனால் கதையில் ஆழம் இருந்தால் படம் மெதுவாக நகர்வதாக தெரியாது. கதைக்கு தேவையான காட்சிகள் இருக்க வேண்டும். பத்து நிமிடங்களை குறைப்பதால் படம் வேகமாகி விடாது. கதையில் விஷயங்கள் இருந்தால்தான் படத்தில் வரும். ஒன்றரை மணி நேரத்திலும் மிக மெதுவாக கதை சொல்ல முடியும். மூன்று மணி நேரத்திலும் விறுவிறுப்பாக கதை சொல்ல முடியும். கதையை பொறுத்ததுதான்.
நான் மிகவும் தாமதமாக படங்கள் எடுப்பதாக சிலர் என்னிடம் கூறுகிறார்கள். பொதுவாக எனக்கு கதை எழுதுவதற்கு 6 மாதம் ஆகும். அதனை எடுப்பதற்கு 50 நாட்கள் ஆகும். அந்த படத்திற்கு தயாரிப்பாளர்கள் கிடைப்பது, கதை அமைவது அனைத்தும் சேர்ந்து கால தாமதமாகிறது என்று நினைக்கிறேன். வாழ்கையில் என்னை இந்த அளவு கொண்டுவந்தது நேர்மை தான். சினிமாவிற்கு நான் நேர்மையாக இருக்கிறேன். இந்த படத்தில் அந்த நேர்மையை நீங்கள் பார்க்கலாம்.
இன்று படங்களை விமர்சனம் செய்கிறவர்கள் குறித்து தவறாக பேசப்படுகிறது. ஆனால் நான் விமர்சனம் செய்கிறவர்களையும் கருத்தில் வைத்துதான் இந்த படத்தை எடுத்துள்ளேன். விமர்சனம் செய்கிறவர்கள் என்ன சொல்வார்கள் என யோசித்தே இதில் வேலை பார்த்துள்ளேன். எனவே அவர்களும் இந்த படத்தில் என்னுடன் பயணம் செய்கிறார்கள்” என பேசினார்.
இதையும் படிங்க: சைந்தவியை பிரிய அந்த நடிகை காரணம் இல்லை... முதல் முறையாக விளக்கம் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்
பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு இயக்குநர் அறிவழகன் பதிலளிக்கையில், “ஹாரர் எனும் நம்ப முடியாத விஷயமாக இருந்தாலும் நம்பக்கூடிய விஷயங்களை வைத்து மட்டுமே படத்தை கொண்டு போக வேண்டும் என எண்ணுவேன். அதற்காக நிறைய ஆராய்ச்சி செய்து புத்தகங்கள் படித்து, ஆணவப்படங்கள் மூலமாக நிறைய விஷயங்களை தெரிந்துகொண்டுதான் இந்த படத்தின் கதையை எழுதியுள்ளேன்.
சிம்ரன், லைலா இருவரும் தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகைகள். அவர்கள் இருவரும் இந்த படத்தின் கதையின் ஆழத்தை புரிந்துகொண்டு நடித்துள்ளனர். 'சப்தம்' என தலைப்பு வைத்திருப்பதால் படம் முழுக்க சப்தமாக இரைச்சலாக இருக்கும் என நினைக்க வேண்டாம். படத்தில் நிறைய நிசப்தம் இருக்கும். அது இப்படத்தில் நல்ல உணர்வை கொடுக்கும்.
சில படங்களில் ஒலி அதிகமாகவும் இரைச்சாலகவும் இருப்பதால் அவை தோல்வி அடைவதாக கூறுகிறார்கள். ஒரு படத்தின் தோல்விக்கு அது காரணமாக இருக்க முடியாது. கதைதான் வெற்றி தோல்விக்கு காரணம். சிலர் ‘ஈரம் 2’ என சப்தம் தலைப்பிற்கு கீழ் வைக்க சொன்னார்கள். அதனால் படம் நன்றாக ஓடும் என சொன்னார்கள். ஆனால் இந்த படத்திற்கும் ’ஈரம்’ படத்திற்கும் சம்பந்தம் இல்லை. எனவே நேர்மையாக அந்த தலைப்பை பயன்படுத்தவில்லை. ஈரம் 2 திரைப்படம் எடுத்தால் இயக்குநர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தில்தான் எடுப்பேன்" என்றார்.