திருச்சி: தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெற்ற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் சூறாவளி பிரச்சாரத்தைத் தொடங்கி விட்டனர். இந்நிலையில், வருகிற 24ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் பிரச்சாரத்தைத் தொடங்கவுள்ளார்.
வரும் 24ஆம் தேதி திருச்சியில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடம், மேடை ஏற்பாடு பணிகளை கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, செய்தியாளர்களிடம் பேசுகையில், "அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், வரும் 24ஆம் தேதி, 40 மக்களவை தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்ய உள்ளனர்.
தேமுதிக, அதிமுக கூட்டணியில் இடம் பெறுமா என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள். பிரதமர் மோடி கோவையில் பங்கேற்று நடந்த பேரணியில், மாணவர்களைப் பயன்படுத்தியதாகப் புகார் எழுந்துள்ளது என்ற கேள்விக்கு, சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்கலாம் எனத் தெரிவித்தார்.
இப்போது, ஜெயலலிதாவைப் புகழ்ந்து பேசும் பிரதமர் மோடி, அந்த கட்சியின் மாநிலத் தலைவர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மட்டுமின்றி அண்ணாதுரை போன்றவர்களையும் இகழ்ந்து பேசிய போது, ஏன் கண்டிக்கவில்லை. திருச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.