நீலகிரி:நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை வெயிலின் தாக்கத்தால் மரங்கள், செடி, கொடிகள் காய்ந்து கருகி காணப்பட்டது. இதில், குன்னூர் அருகே உள்ள ஃபாரஸ்ட் டேல் பகுதியில், தனியாருக்குச் சொந்தமான தோட்டத்தை சுத்தம் செய்த பொழுது, அதன் குப்பைகளை எரித்ததில் அருகில் இருந்த வனப்பகுதியில் தீ பரவியது.
இதில், சுமார் 30 ஏக்கர் பரப்பிலான காடுகள் எரிந்து நாசமானது. மார்ச் 12ஆம் தேதி தீ பற்றத் துவங்கியது. தீயானது கடந்த 10 நாட்களாக கட்டுக்குள் கொண்டுவர வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தனர். ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு, தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. இரண்டு நாட்களுக்கு மேல் ஹெலிகாப்டர் மூலம் வனப்பகுதியில் தண்ணீர் ஊற்றப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. மேலும், 200க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, 10 நாட்களாக புகை மூட்டத்தில் பணியாற்றியதால் பணியாளர்களுக்கு சுவாசக் கோளாறு, இதய பாதிப்பு, கண்களில் எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மேலும், வனப்பணியாளர்களின் உடல் நலத்திற்கு ஏதேனும் பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய, நீலகிரி மாவட்ட வன அலுவலர் கௌதம் உத்தரவின் படி, குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் 50 பேர் கொண்ட முதல் குழுவினர், குன்னூர் தனியார் மருத்துவமனையில் எக்ஸ்-ரே, இரத்த அழுத்தம், கண், மூக்கு, காது என அனைத்து மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.