சென்னை: 'எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற நூல் வெளியீட்டு விழா, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இந்த நூலினை தவெக தலைவர் விஜய் வெளியிட, ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு மற்றும் அம்பேத்கர் பேரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இந்த விழாவில், தமிழ்நாட்டில் தற்போதும் மன்னர் பரம்பரை ஆட்சிதான் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த மன்னராட்சியை ஒழிப்பதன் மூலம் மட்டுமே எளிய மக்களுக்கு அதிகாரம் என்ற அண்ணல் அம்பேத்கரின் கனவை நாம் நனவாக்க முடியும்.
தமிழ்நாட்டில் இனி மன்னராட்சி கூடாது. கருத்தியல் சார்ந்து இயங்கும் தலைவன் தான் இனி தமிழ்நாட்டை ஆள வேண்டும் என விசிக துணை பொதுச் செயலாளர் பேசி இருந்தார். இவரது பேச்சு அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசும் பொருளாக மாறின. இதனை அடுத்து, வி.சி.க கட்சியின் உயர்மட்ட குழு நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், ஆதவ் அர்ஜுனாவை விசிக கட்சியில் இருந்து 6 மாத காலம் இடைநீக்கம் செய்யலாம் என முடிவெடுத்து அறிவித்தனர்.
இந்த அறிவிப்புக்குப் பின் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், "தலைவரின் கையெழுத்திட்ட துணைப் பொதுச்செயலாளர் என்கிற பொறுப்பு கடிதம் கிடைக்கப்பெற்ற போது என்ன மனநிலையில் இருந்தேனோ, அதே மனநிலையில் இப்போது தலைவரின் கையெழுத்துடன் வெளியாகியுள்ள எனது இடைநீக்கம் குறித்த கடிதத்தையும் எதிர்கொள்கிறேன்.
புரட்சியாளர் அம்பேத்கர், பெரியார், அண்ணா ஆகியோரின் கருத்துக்களை உள்வாங்கி அரசியல் பயணத்தைத் துவங்கினேன். அந்த கொள்கைகளின் வழியில் எனது பயணம் எப்போதும் தொடரும்" என பதிவிட்டிருந்தார்.
இதையும் படிங்க : "ஆயிரம் கைகள் மறைத்தாலும்.. ஆதவ(ன்) மறைவதில்லை" - ஆதவ் அர்ஜுனா ட்வீட்!
இந்நிலையில், இதை விமர்சிக்கும் விதமாக இயக்குநர் அமீர் தனது வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், மக்களுக்கு தெரியாமல் மன்னரை உருவாக்கியவர் தனக்கு பதவி கிடைக்கவில்லை என்றவுடன் மக்களிடம் பிரச்சாரம் செய்யப் போகிறேன் என்கிறார். என்ன கொடுமை சார் இது என வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸில் பதிவிட்டிருந்தார்.
தற்போது ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் பக்கத்தில், 'ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு' என்ற முழக்கத்துடன் எளிய மக்கள் அதிகாரத்தை அடைவதற்கான பிரச்சாரத்தை மக்கள் சக்தியுடன் விரைவில் உருவாக்குவோம் என பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவினை விமர்சனம் செய்யும் விதமாக இயக்குநர் அமீர் மீண்டும் தனது வாட்ஸ்ஆப்பில் ஸ்டேட்டஸ் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "விடுதலை சிறுத்தைகளை வலிமை இழக்க செய்து திருமா அவர்களை தனிமைப்படுத்த நினைக்கும் அரசியல் புரோக்கர்களை எதிர்த்து களமாட வேண்டிய நேரம் இது. ’I STAND WITH THIRUMA’" என பதிவிட்டுள்ளார்.