சென்னை : பிரபல நடிகர் ஜெயராம் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் முறை மாமன், தெனாலி, பஞ்சதந்திரம் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி பொன்னியின் செல்வன் படத்தில் ஆழ்வார்க்கு அடியன் ( நம்பி) கேரக்டர் மிகவும் பிரபலமடைந்தது.
இந்நிலையில், இவரது மகன் காளிதாஸ் ஜெயராம் தமிழில் மீண்குழம்பும் மண் பானையும், பூமரம், ஒருபக்க கதை ஆகிய படங்களில் நடித்தார். பின்னர் சுதா கொங்கரா இயக்கத்தில், காளிதாஸ் ஜெயராம் நடித்த 'பாவக் கதைகள்' ஆந்தாலஜி தொடரில் அவரது நடிப்பு பெரும் பாராட்டை பெற்றது. அந்த படத்தில் திருநங்கையாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மேலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தில் பிர்பஞ்சன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான ’ராயன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் மாடல் அழகி தாரிணி காளிங்கராயர் ஆகிய இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இதையும் படிங்க : நீண்ட நாள் காதலியை கரம் பிடித்த காளிதாஸ் ஜெயராம்; திருமண புகைப்படங்கள் வைரல்!
இந்நிலையில் கடந்த டிசம்பர் 7ஆம் தேதி காளிதாஸ் ஜெயராம், தாரிணி இருவருக்கும் கேரள மாநிலம் குருவாயூர் கோயிலில் திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில் நடிகர் சுரேஷ் கோபி உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
மேலும் புதுமண தம்பதிகளுக்கு நிகிலா விமல், பூர்ணிமா இந்திரஜித், நைலா உஷா, அன்னா பென், மஞ்சிமா மோகன், கீது மோகன்தாஸ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவித்தனர்.
இந்த நிலையில் இன்று சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் சங்கீத் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மேலும், பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.