சென்னை : சட்டத்துறை அமைச்சர் ரகுபதி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "அரைத்த பொய்யையே அரைத்து மக்களை ஏமாற்ற நினைக்க வேண்டாம் எடப்பாடி பழனிசாமி அவர்களே. முதலமைச்சர் அவர்களும், அமைச்சர் பெருமக்களும் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வைத்த பொய் குற்றச்சாட்டுகளை எத்தனையோ முறை மறுத்து அறிக்கை விட்டாலும், அதை எல்லாம் படிக்கவும் மாட்டேன், செய்திகளில் பார்க்கவும் மாட்டேன் என செக்குமாடு போல அதே பொய்களை மீண்டும், மீண்டும் உளறிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி.
சேக்கிழார் எழுதிய கம்பராமாயாணம் படித்த அறிவாளி எடப்பாடி பழனிசாமியின் கவனத்திற்கு, இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்ததை விட மிக அதிகமான மழை பொழிந்து ஃபெஞ்சல் புயல் சேதத்தை ஏற்படுத்தினாலும், முதலமைச்சரின் உத்தரவின் பேரில், மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெரிய அளவில் ஏற்பட இருந்த உயிர் சேதங்கள் தடுக்கப்பட்டன.
வரலாறு காணாத மழைப்பொழிவு காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பெரும் சேதம் ஏற்படுவதை தடுக்கவே சாத்தனூர் அணை திறக்கப்பட்டது. அதுவும் ஐந்து முறை முறையான எச்சரிக்கை அந்த பகுதி மக்களுக்கு கொடுத்து அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்ட பின்பு தான் அணை திறக்கப்பட்டது.
அரைத்த பொய்யையே அரைத்து மக்களை ஏமாற்ற நினைக்க வேண்டாம் எடப்பாடி பழனிச்சாமி அவர்களே!
— எஸ்.ரகுபதி (@regupathymla) December 10, 2024
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்களும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்வைத்த பொய் குற்றச்சாட்டுகளை எத்தனையோ முறை மறுத்து அறிக்கை விட்டாலும் அதை எல்லாம் படிக்கவும் மாட்டேன்,
அதுவும் அணையின் நீர் திறப்பானது எடுத்தெடுப்பில் அதிகமாக திறக்கப்படவில்லை. 32,000 கனஅடி, 63,000 கன அடி, 1,06,000, 1,30,000 கனஅடி, 1,68,000 கனஅடி என படிப்படியாக தான் அதிகரித்து திறக்கப்பட்டது. அதன் காரணமாகவே உயிரிழப்புகள் நடக்காமல் தடுக்கப்பட்டுள்ளது.
இதைப்பற்றி எல்லாம் ஏற்கனவே நீர்வளத்துறை அமைச்சர் ஆதாரத்தோடு தெரிவித்தும் அதை படிக்காத எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீண்டும், மீண்டும் பொய் சொல்லி வருகிறார். அதிமுக ஆட்சியில் செம்பரம்பாக்கம் ஏரியை எந்த முன் அறிவிப்புமின்றி திடுதிப்பென திறந்ததால் 250 பேருக்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்து போனார்கள்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீதும், அதிமுக மீதும் படிந்த அந்த இரத்தக்கறையை மறைக்கடிக்கத் துடிக்கும் பழனிசாமி அண்டப் புளுகை அள்ளிவிட்டுக் கொண்டிருக்கிறார். அடுத்து அதிமுக ஆட்சியில் எந்த பாலங்களும் உடைந்து சேதாரம் ஆகவில்லை என்ற பொய்யை அடுக்கிறார்.
இதையும் படிங்க : பள்ளி, கல்லூரி வளாகங்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு கேளிக்கை வரி; சட்ட மசோதா நிறைவேற்றம்!
அவருக்கு ஏற்கனவே பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள், அதிமுக ஆட்சியில் கட்டும் போதே இடிந்து விழுந்த கடலூர் சிங்கார தோப்பு பாலம், நாகாநதியின் குறுக்கே கமண்டல நதிமேல் கட்டப்பட்டு ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பாலம் வரை உடைந்து விழுந்த 7 பாலங்களின் கதைகளையும், அதிமுக ஆட்சியின் அவல நிலையையும் எடுத்துக் கூறி இருந்தார். அதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் கண்டதையும் உளறி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.
திராவிட மாடல் ஆட்சியில் முதலமைச்சர் அவர்களின் மேற்பார்வையில், சீரிய முறையில் மேற்கொண்ட சென்னை வடிகால் பணிகளால் தற்போது ஃபெஞ்சல் புயலால் பெய்த கனமழைக்கு சென்னையில் அதிகளவு நீர் தேங்காமல் மழை நின்ற உடனே வெள்ளநீர் வடிந்து சென்னை இயல்பு நிலைக்கு திரும்பியது.
அதை பொறுத்துக் கொள்ள முடியாத பழனிசாமி சென்னையில் மழையே பெய்யவில்லை என பேசிக்கொண்டு இருக்கிறார். கனமழை பெய்யாத சென்னைக்கு பிறகு எதற்காக அதிமுக நிர்வாகிகளே மக்களுக்கு உதவி செய்யுங்கள் என பகுதி வாரியாக பட்டியல் அறிக்கை வெளியிட்டு விளம்பரம் தேடுனீர்கள் பொய்சாமி பழனிசாமி.
தமிழ்நாட்டு மக்களின் நலனை மட்டுமே முன்வைத்து முதலமைச்சரின் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வரும் திராவிட மாடல் ஆட்சியால் தமிழ்நாட்டு மக்களின் ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருவதால் அதை தாங்கி கொள்ள முடியாமல் வயிற்றெரிச்சலில் கூறிய பொய்களையே திரும்ப, திரும்ப எத்தனை முறை கூறினாலும் எடுபடாது பழனிசாமி. தமிழ்நாட்டு மக்கள் மனதில் பொய்யர்களால் என்றைக்குமே இடம் பிடிக்க முடியாது. நீங்கள் ஆயிரம் பொய்களை கூறினாலும் திராவிட மாடல் நல்லாட்சி மீது சிறு கீறல் கூட விழவைக்க முடியாது" என பதிவிட்டுள்ளார்.