கோயம்புத்தூர்: கோவை மருதமலை வனப்பகுதியில் கடந்த மே 30ஆம் தேதி உடல் நலம் பாதித்த நிலையில் 40 வயது பெண் யானை கண்டுபிடிக்கப்பட்டு, 5 நாட்கள் வனத்துறையினர் சிகிச்சை அளித்தனர். இதனிடையே, தாயுடன் இருந்த மூன்று மாத ஆண் குட்டி யானை, அப்பகுதியில் இருந்த மற்றொரு யானைக் கூட்டத்துடன் இணைக்கப்பட்டு வனப்பகுதிக்குள் சென்றது.
பின்னர், உடல் நலம் தேறிய தாய் யானை, கடந்த ஜூன் 3ஆம் தேதி வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டது. இந்த நிலையில், கூட்டத்துடன் சுற்றி வந்த குட்டி யானை, கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் கூட்டத்தில் இருந்து பிரிந்து, அப்பகுதியில் இருந்த தனியாருக்குச் சொந்தமான தோட்டத்துக்குள் சுற்றி வந்துள்ளது.
இது குறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் குட்டி யானையை மீட்டு, அதன் தாய் யானை நடமாடி வந்த குப்பேபாளையம் அட்டுக்கல் வனப்பகுதிக்கு கொண்டு வந்தனர். பின்னர், குட்டி யானையை தாயுடன் சேர்க்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டும் பலனளிக்கவில்லை.
அதனை அடுத்து, ஆனைமலை டாப்சிலிப் கோழிக்கமுதி யானைகள் முகாமில் இருந்து அனுபவம் வாய்ந்த பாகன்கள், காவடி உள்ளிட்ட 4 பேர் வரவழைக்கப்பட்டனர். அவர்களும் குட்டி யானையை தாயுடன் சேர்க்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். இருப்பினும், குட்டி யானையை தாய் யானையுடன் சேர்க்க முடியவில்லை.
பின்னர், இன்று (வெள்ளிக்கிழமை) காலை பாகன் மற்றும் காவடி குழுவினர், வனத்துறையினர் ஆகியோர் ஒன்றிணைந்து குட்டி யானையை தாயுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, தாய் யானைக்கு நெருக்கமாக குட்டி யானை விடப்பட்ட போதிலும், தாய் யானை குட்டி யானையை ஏற்றுக் கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனிடையே, குட்டி யானை கூட்டத்தில் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டும் பலனிக்கவில்லை. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், "தாய் யானையுடன் குட்டி யானையை இணைக்க தீவிர முயற்சி மேற்கொண்டோம். ஆனால், தாய் யானை குட்டி யானையை ஏற்றுக் கொள்ளவில்லை. இதுகுறித்து தலைமை வன உயிரினக் காப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்படு, அவரது உத்தரவின்பேரில் குட்டியை முகாமுக்கு கொண்டு சென்று பராமரிப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:வால்பாறையில் வாகனங்களை வழிமறித்த ஒற்றை காட்டு யானை.. போக்குவரத்து பாதிப்பு!