தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளி - கார் ஷெட் - குடியிருப்பு.. திருப்பத்தூரை பரபரப்பாக்கிய சிறுத்தை பிடிபட்டது! - tirupathur leopard caught - TIRUPATHUR LEOPARD CAUGHT

Tirupathur leopard caught: திருப்பத்தூர் நகர் பகுதியில் உள்ள பள்ளி மற்றும் குடியிருப்பு பகுதியில் பதுங்கிய சிறுத்தையை வனத்துறையினர் 10 மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு மயக்க ஊசி செலுத்தி பிடித்து கூண்டில் அடைத்தனர்.

tirupathur leopard image
திருப்பத்தூரில் பிடிபட்ட சிறுத்தை புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 15, 2024, 7:18 AM IST

திருப்பத்தூர்:திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட சாமநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறையினர், சிறுத்தையைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூரில் பிடிபட்ட சிறுத்தை வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu)

இதனிடையே, வீட்டிலிருந்து அருகே உள்ள தனியார் பள்ளி வளாகத்திற்கு சிறுத்தை தாவிச் சென்று, அங்கிருந்த பள்ளி காவலாளி கோபால் என்பவரை தலையில் தாக்கியுள்ளது. பின்னர், அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து, மேல் சிகிச்சைக்காக அவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதனிடையே, பள்ளியில் இருந்த சிறுத்தை அருகே உள்ள கார் ஷெட்டிற்கு சிறுத்தை தாவிச் சென்றுள்ள்து. அதனைத் தொடர்ந்து, அருகில் இருந்த பள்ளியில் மாணவ, மாணவிகளை போலீசார் பாதுகாப்புடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சிறுத்தையைப் பிடிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (ஜூன் 15) விடுமுறை அறிவித்தார்.

பின்னர், சிறுத்தையைப் பிடிப்பதற்காக ஓசூர் மற்றும் சேலத்தில் இருந்து 20 வனத்துறை அதிகாரிகள் திருப்பத்தூருக்கு வந்தனர். மேலும், கார் ஷெட்டில் சிறுத்தை புகுந்த போது, அங்கிருந்த சில இளைஞர்கள் சிறுத்தையிடம் இருந்து தப்பிக்க, காரில் நுழைந்து காரில் சிக்கிக்கொண்டனர். பின்னர், இளைஞர்களின் உறவினர்கள் போனில் தொடர்புகொண்டு பேசிய போது, சிறுத்தை இருக்கும் இடத்தில் இருந்து மிக அருகாமையிலேயே இருப்பதாக கூறியுள்ளனர்.

இதன் காரணமாக சிறுத்தை கார் ஷெட்டில் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், சுமார் 7 மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பத் துறையினர், காரில் சிக்கிய இளைஞர்களை மீட்டு அவர்களுக்கு முதலுதவி அளிக்க திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து, மண்டல வனப் பாதுகாவலர் பத்மாவதி, வனவிலங்கு மருத்துவர்கள் சுகுமார் மற்றும் சுதாகர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் மற்றும் வனத்துறையினர் கார் ஷெட்டில் பதுங்கிய சிறுத்தையை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க முயற்சித்தனர்.

அப்போது சிறுத்தை கார் ஷெட்டில் இருந்து தப்பித்து மீண்டும் குடியிருப்பு பகுதியில் புகுந்தது. அதனைத் தொடர்ந்து, 10 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு வனத்துறையினர், காவல்துறையினர், வருவாய்த் துறையினர் அனைவரின் கூட்டு முயற்சியில் சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி உயிருடன் பிடித்து கூண்டில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் திருப்பத்தூர் நகர் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:சாரைப் பாம்பை பிடித்து, தோல் உரித்து, சமைத்து சாப்பிட்டவர் கைது! - snake eating man arrested

ABOUT THE AUTHOR

...view details