திருநெல்வேலி:தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் திருக்கோயில் ஆனித் திருவிழா 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாட்கள் திருவிழாவில் காலை, மாலை இருவேளைகளிலும்சுவாமிய அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்துருளி திருவீதி உலா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி நேற்றிரவு 7ம் திருநாளையொட்டி சுவாமி நெல்லையப்பர் வெள்ளிக் குதிரை வாகனத்திலும், காந்திமதி அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். ஏழாம் திருநாளையொட்டி நடராஜ பெருமாள் தங்கத்தட்டி சப்பரத்தில் சிவப்பு சாது திருக்கோளத்தில் எழுந்துள்ளனர். பின்னர் நடராஜபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தாண்டவ தீபாராதனை நடைபெற்றது.
சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஸ்வாடச உபச்சார மகா தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து நடராஜ பெருமான், சுவாமி நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்பாளுக்கு குடவறைவாயில் தீபாராதனை நடத்தப்பட்டு பஞ்சமூர்த்திகளுடன் திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
நெல்லையப்பர் கோயில் தேரோட்டம்: திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை தேரோட்டம் நடைபெறுகிறது. ஆனித் தேரோட்டம் என்பது நெல்லையின் புகழ்பெற்ற திருவிழாவாகும் எனவே நாளை நெல்லை மட்டுமல்லாமல் பல ஊர்களில் இருந்து மக்கள் தேர் திருவிழாவை காண குடும்பத்தோடு வந்து செல்வார்கள். காலை 7 மணிக்கு மேல் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படும் தொடர்ந்து நான்கு ரத வீதிகளிலும் சிவ கோஷம் விண்ணை முழங்க தேர் வலம் வரும்.