தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈசிஆர் சாலையில் கார் மரத்தில் மோதி பயங்கர விபத்து; 5 பேர் உயிரிழப்பு - மு.க.ஸ்டாலின் இரங்கல்! - ECR car accident - ECR CAR ACCIDENT

ECR car accident: கிழக்கு கடற்கரை சாலையில் அதிவேகமாகச் சென்ற கார் சாலையோரம் உள்ள மரத்தில் மோதிய விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

died persons photo
கார் விபத்தில் உயிரிழந்த நபர்கள் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 15, 2024, 3:00 PM IST

சென்னை: கல்பாக்கம் அருகே உள்ள வாயலூர் பகுதியில் கிழக்கு கடற்கரை சாலை, கூவத்தூரில் இருந்து சென்னை நோக்கி நேற்று இரவு கார் ஒன்று அதிவேகமாக சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது வாயலூர் பகுதியில் திடீரென சாலையின் குறுக்கே மாடு வந்ததால், அதிவேகமாகச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் உள்ள மரத்தில் மோதி மூன்று முறை கவிழ்ந்து புரண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது.

இதில் காரில் பயணித்த ஐந்து பேரும் நசுங்கிய நிலையில், காரின் உள்ளே சிக்கிக் கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அப்பகுதி மக்கள், சதுரங்கப்பட்டினம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், காரில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இரண்டு பேரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், காரில் இருந்த மற்ற மூன்று பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், அவர்களை சுமார் 2 மணி நேரம் போராடி காரின் மேற்பரப்பு பகுதிகளை இயந்திரம் மூலம் வெட்டி எடுத்து, மூன்று பேரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த இரண்டு நபர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும், இது குறித்து சதுரங்கப்பட்டினம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கார் அதிவேகமாக ஓட்டிச் சென்றது விபத்து ஏற்பட காரணமா எனவும், காரில் இருந்த நபர்கள் மதுபோதையில் காரை இயக்கினார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து போலீசாரின் முதற்கட்ட தகவலில், விபத்தில் உயிரிழந்தவர்கள் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த யுவராஜ், மாதேஷ், விக்னேஷ், ராஜேஷ் மற்றும் ஏழுமலை என்பது தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம் வாயலூர் கிராமம், கிழக்குக் கடற்கரை சாலையில் நேற்று இரவு சுமார் 9.30 மணிக்கு பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக மரத்தின் மீது மோதிய விபத்தில், அதில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த ராஜேஷ், மாதேஷ், யுவராஜ், ஏழுமலை ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், விக்னேஸ்வரன் என்பவர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரண உதவிகள் வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:மனைவியைக் கொலை செய்த மத போதகர் வீட்டில் பெட்டி பெட்டியாக கிடைத்த போதை மாத்திரைகள்! - Narcotic Pills Seized

ABOUT THE AUTHOR

...view details