தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

யானை தந்தம் விற்பனை? கோவையில் சிக்கிய 5 பேர்... முக்கிய புள்ளிக்கு வலைவீச்சு! - ELEPHANT IVORY SMUGGLING

கோவை மாவட்டம் சிறுமுகை பகுதியில் யானை தந்தத்தை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 5 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

யானை தந்தத்துடன் கைது செய்யப்பட்ட நபர்கள்
யானை தந்தத்துடன் கைது செய்யப்பட்ட நபர்கள் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 9 hours ago

கோயம்புத்தூர்:சிறுமுகை பகுதியில் யானை தந்தத்தை விற்பனை செய்வதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஐந்து பேரை கைது செய்த வனத்துறையினர், யானை தந்தத்தைப் பறிமுதல் செய்து அவர்களை சிறையில் அடைத்துள்ளனர். மேலும், கடத்தல் வழக்கில் தொடர்புள்ள முக்கிய குற்றவாளியைத் தேடி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, காட்டு மாடுகள் என பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. குறிப்பாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் என்பது யானைகளின் வலசை பாதையின் முக்கிய பங்காக உள்ளது.

கேரளாவிலிருந்து வலசை வரும் யானைகள் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தைக் கடந்து கர்நாடக மாநிலம் பந்திப்பூர் வழியாக ஆண்டு தோறும் வலசை செல்வதால் இந்த பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் காணப்படும். அதனால், அப்பகுதியில் வேட்டை கும்பல் யானைகளை வேட்டையாடுவதை தடுக்க சிறப்பு குழுக்கள் அமைத்துக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

யானை தந்தம் பறிமுதல்:

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் யானை தந்தங்கள் விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் விளாமுண்டி வனக்காப்பாளர் அருண்குமாருக்கு, ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில், அருண்குமார் இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததன் பேரில், சிறப்புக் குழு அமைக்கப்பட்டு, சந்தேகத்திற்குட்பட்ட நபர்களை கண்காணித்து வந்தனர்.

அப்போது, ஒரு கும்பல் கோவை வனக்கோட்டம், சிறுமுகை வனச்சரகம் ஓடந்துறை அருகே உள்ள சிராஜ் நகர் பகுதியில் யானை தந்தத்தை வைத்திருப்பது தெரியவந்தது. அதனையடுத்து சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனத்துறையினர், சிறுமுகை வனச்சரகர் மனோஜுக்கு இது குறித்து தகவல் அளித்துள்ளனர். அதனடிப்படையில், 20க்கும் மேற்பட்ட வனப் பணியாளர்கள் விரைந்து சென்று, மேட்டுப்பாளையம் சிராஜ் நகர் பகுதியில் உள்ள கெளஸ் மைதீன் என்பவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு ஜோடி யானை தந்தத்தை அதிரடியாகக் கைப்பற்றியுள்ளனர்.

யானை தந்தம் விற்க முயன்ற 5 பேர் கைது:

மேலும், யானை தந்தங்களை விற்பனை செய்யும் நோக்கில் மறைத்து வைத்திருந்த கெளஸ் மைதீன் (47), ரவி (47), வீரன் (எ) ஆண்டிசாமி (47), கிருஷ்ணகுமார்(36), குமார்(45) ஆகிய ஐந்து பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து, நடத்திய விசாரணையில் தலைமறைவாக உள்ள மணிகண்டன் என்பவர் யானை தந்தத்தை கொண்டு வந்து கொடுத்ததாகவும், அவருக்கு தான் இந்த தந்தங்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது தெரியும் என்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மணிகண்டன் என்பவரை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:குடியிருப்புகளுக்கு அருகில் டாஸ்மாக் கடைகள்..டிஜிபி தலைமையில் குழு அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

இதுகுறித்து, கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் கூறுகையில், "யானை தந்தம் பதுக்கி வைத்திருப்பதாக சத்தியமங்கலம் புலிகள் காப்பாக வனப்பணியாளர்களுக்கு கிடைத்த தகவலின் பேரில், சிறுமுகை வனச்சரகர் மனோஜ் தலைமையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, சிறுமுகை வனச்சரத்திற்குட்பட்ட பகுதியில் சுமார் 30 கிலோ எடையுள்ள ஒரு ஜோடி யானை தந்தம் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 5 பேரையும் விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த வழக்கில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், யானை தந்தத்தை கடத்தி வந்ததாக மணிகண்டன் என்பவரை வனப் பணியாளர்கள் தேடி வருகின்றனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக மணிகண்டன் உள்ளார். அவர் கைது செய்யப்பட்ட பின்னர் தான், இந்த யானை தந்தம் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது யாருக்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்ற விவரம் தெரியவரும் எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details