ராமநாதபுரம்: எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக ஜூலை 31ஆம் தேதி நெடுந்தீவு கடற் பகுதியில் வைத்து இலங்கை ரோந்து படகு ஒன்று ராமேஸ்வரத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரது விசைப்படகு மீது மோதியதில் மீனவர்களின் படகு கடலில் மூழ்கியது. அந்த விசைப்படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மூக்கையா, முத்து முனியாண்டி, மலைச்சாமி, ராமச்சந்திரன் உள்ளிட்ட நால்வரும் உயிர் பயத்தில் கடலில் குதித்தனர்.
இதில் மூவர் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், மலைச்சாமி என்பவர் உயிரிழந்தார். மேலும் ஒரு மீனவரான ராமச்சந்திரனை தேடும் பணியில் இலங்கை கடற்படை அதிகாரிகள் தற்போது வரை ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் உயிரிழந்த மலைச்சாமியின் உடல், உடற்கூறு ஆய்வுக்குப் பின் காங்கேசன் கடற்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
பின்னர் மலைச்சாமியின் உடல் மற்றும் அவருடன் மீன்பிடிக்க சென்ற முத்து முனியாண்டி, மூக்கையா ஆகியோரை சரியாக சுமார் இரண்டு மணி அளவில் ஐ.எம்.பி.எல் எல்லையில் இருந்த இந்திய கடற்படை அதிகாரிகளிடம், இலங்கை கடற்படை அதிகாரிகள் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து காலை நான்கு மணி அளவில் ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திற்கு இறந்த மீனவரின் உடல் கொண்டுவரப்பட்டது.
இது குறித்து மீனவர் மூக்கையா கூறுகையில், "ஜூலை 31ஆம் தேதி காலை 1.30 மணி அளவில் துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்றோம். மீன்பிடித்து விட்டு பகல் ஒரு மணி அளவில் திரும்பி வந்து கொண்டிருக்கும் பொழுது, அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலங்கை கடற்படையின் கப்பல் எங்கள் படகின் மீது திடீரென மோதியதில் எங்களது படகின் ஒரு பகுதிக்குள் தண்ணீர் புகுந்த உடனே ஒரு நிமிடத்திற்குள் விசைப்படகு கடலுக்குள் மூழ்கியது.