ஹைதராபாத்: நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நாளை நடைபெற உள்ளது. புதிதாக தொடங்கப்பட்ட அரசியல் கட்சியின் முதல் மாநில மாநாடு என்பது அக்கட்சியின் தொண்டர்களுக்கு தங்களது கட்சி எதை நோக்கி பயணிக்கப் போகிறது என்பதை உணர்த்துகின்ற முக்கியமான மாநாடு ஆகும். தமிழ்நாட்டின் அரசியலைப் பொறுத்தவரை இதுவரை அரசியல் கட்சி தொடங்கிய எம்ஜிஆர், விஜயகாந்த் ஆகியோர் முதல் மாநில மாநாடுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தனர். அதே போன்றதொரு முக்கியத்துவத்தை இப்போது தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜயும் கொடுத்து வருகிறார்.
திருச்சியில் அதிமுக முதல் மாநில மாநாடு: திமுகவில் இருந்து விலகிய எம்ஜிஆர், அதிமுக என்ற கட்சியை தொடங்கிய பின்னர் முதல் பொதுக்கூட்டம், முதல் மாநில மாநாடு இரண்டையும் திருச்சியில் நடத்தினார். எம்ஜிஆர் அதிமுகவை 1972 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் தேதி தொடங்கினார். இதன் பின்னர் அதிமுக சார்பில் முதல் பொதுக்கூட்டம் 1972 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி திருச்சி மன்னார்புரத்தில் நடைபெற்றது.
கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தும் விஜய் (Credit - ETV Bharat Tamil Nadu) இதன் பின்னர் 1973ஆம் ஆண்டு நடந்த திண்டுக்கல் மக்களவை இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நிறுத்திய மாயத்தேவர் வெற்றி பெற்றார். திருச்சியில் முதல் பொதுக்கூட்டத்தை நடத்திய ராசியின் விளைவாக இந்த வெற்றி கிடைத்ததாக எம்ஜிஆர் கருதினார். இதன் பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து 1974ஆம் ஆண்டு ஏப்ரல் 23 மற்றும் 24ஆம் தேதிகளில் அதிமுகவின் முதல் மாநில மாநாடு, முதல் பொதுக்குழு கூட்டம் இரண்டும் திருச்சி அருகில் உள்ள காட்டூரில் நடைபெற்றது. இதன் பின்னர் 1977ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மிகப்பெரும் வெற்றி பெற்றது. எம்ஜிஆர் முதலமைச்சராக பதவியில் அமர்ந்தார். திருச்சியில் மாநில மாநாடு நடத்தப்பட்டதன் விளைவாகவே இந்த மாபெரும் வெற்றி தமக்கு சாத்தியமானதாக எம்ஜிஆர் நம்பினார்.
திருச்சியை தலைநகராக்க விரும்பிய எம்ஜிஆர்:தமக்கு திருப்புனை வெற்றியை அளித்த திருச்சியின் மீது எம்ஜிஆர் மிகவும் பற்றுக் கொண்டிருந்தார். இதன் விளைவாகவே அவர் 1980களில் திருச்சியை தமிழ்நாட்டின் தலைநகராக மாற்ற வேண்டும் என்று நினைத்திருந்தார். தென் மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் மாநில தலைநகருக்கு சென்னைக்கு வருவதற்கு மிகுந்த பொருட் செலவுடன், நேரமும் அதிகமாகிறது என்று எம்ஜிஆர் கருதினார். எனவே, திருச்சி தலைநகராக மாற்றப்படும் என்றும் அறிவித்தார்.
இதையும் படிங்க:விஜயின் அரசியல் கன்னி மேடை! முழுவீச்சில் தயாராகியிருக்கும் வி.சாலை
எம்ஜிஆரின் முடிவுக்கு அப்போது எதிர்கட்சியாக இருந்த திமுக எதிர்ப்புத் தெரிவித்தபோதும், புதிய தலைமை செயலகம் அமைப்பதற்காக திருச்சியில் இடம் தேர்வு செய்யும் பணியிலும் அப்போது எம்ஜிஆர் அரசு தீவிரம் காட்டியது. ஆனால், அவர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் திருச்சியை தலைநகராக்கும் முடிவு கைவிடப்பட்டது. அதிமுகவின் உயர்வில் திருச்சிக்கு முக்கிய பங்கு உண்டு என்று எம்ஜிஆர் தொடர்ந்து நம்பிக்கை வைத்திருந்தார்.
வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் மாநாட்டு திடல் (Credit - ETV Bharat Tamil Nadu) மதுரையில் முதல் மாநாடு நடத்திய விஜயகாந்த்: கறுப்பு எம்ஜிஆர் என்ற முத்திரையோடு அரசியலில் களம் இறங்கிய நடிகர் விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். தேமுதிக என்ற கட்சியின் பெயரையே அவர் மதுரையில் நடைபெற்ற முதல் மாநில மாநாட்டில்தான் அறிவித்தார். தேமுதிகவின் முதல் மாநில மாநாட்டை 2005ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி அவர் மதுரை திருநகரில் நடத்தினார்.
மதுரையை அவர் தேர்வு செய்ததற்கு காரணம், விருதுநகரில் அவர் பிறந்தபோதிலும், தம்மை சினிமா ரீதியாக, அரசியல் ரீதியாக மதுரைதான் தம்மை வளர்த்த ஊர் என்று நம்பினார். அதனாலேயே அவர் மதுரையில் தேமுதிகவின் முதல் மாநாட்டை நடத்தினார். முதல் மாநில மாநாட்டுக்குப் பின்னர் 2006ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது. 2006ஆம் ஆண்டு நடத்த சட்டப்பேரவைத் தேர்தலில் 28 லட்சம் வாக்குகளை (8.38%) தேமுதிக பெற்றதோடு, தமிழகத்தின் மூன்றாவது பெரும் வளர்ச்சி பெற்றது.
திராவிட கட்சிகளுக்கு மாற்றாக அறியப்பட்ட விஜயகாந்த்:2006ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக பல தொகுதிகளில் தோற்கவும், திமுக பல தொகுதிகளில் வெற்றி பெறவும் தேமுதிக பிரித்த வாக்குகளே காரணமாக அமைந்தன. தேமுதிக தலைவரான விஜயகாந்த் மட்டும் விருதாசலம் தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக சட்டப்பேரவைக்கு சென்றார். கட்சி தொடங்கிய ஒரு ஆண்டுக்குள் அவரால் எம்எல்ஏ ஆக முடிந்ததற்கு மதுரையில் நடைபெற்ற முதல் மாநாடு காரணம்தான் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. திராவிட கட்சிகளுக்கு மாற்றாக விஜயகாந்த் பார்க்கப்பட்டார்.
தவெக மாநாட்டு திடலில் தலைவர்கள் கட்-அவுட்கள் (Credit - ETV Bharat) எம்ஜிஆரைப் போலவே ஆன்மீகத்திலும், ராசியிலும் அவருக்கு நாட்டம் இருந்தது. இதனை விஜயகாந்தே வெளிப்படையாக சொன்னதும் உண்டு. முதல் மாநில மாநாட்டின் மேடையிலேயே இதை விஜயகாந்த் தெளிவாக கூறியிருக்கிறார். "மதுரையை ஆளும் சிவபெருமான், மீனாட்சி, திருப்பரங்குன்றம் முருகன் மற்றும் எனது குலதெய்வம் அருளாலும், உங்களின் ஆசியினாலும் கட்சியின் பெயர் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என்று வைத்திருக்கின்றேன்,"என்று விஜயகாந்த் சொன்னார்.
இதையும் படிங்க:திராவிட மண்ணில் "தமிழ் தேசிய சித்தாந்தம்" பேசும் விஜய்!
முதலில் அவர் எம்எல்ஏவாக சட்டப்பேரவைக்கு சென்றபோதிலும் அதன் பின்னர் வந்த தேர்தல்களில் தனித்தே களம் இறங்கிய நிலையில் அவரால் கணிசமான வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற முடியவில்லை. மக்களுடன்தான் கூட்டணி என்று அடிக்கடி கூறும் விஜயகாந்த் கடந்த 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி வைத்தார். இதன் மூலம் 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் வெற்றி பெற்றார். கட்சி தொடங்கிய ஆறு வருடங்களில் தமிழ்நாட்டின் எதிர்கட்சி தலைவராக ஆனார். அதற்கு மதுரையில் நடத்திய முதல் மாநில மாநாடுதான் காரணம் என்று விஜயகாந்த் கருதினார்.
முதலில் திருச்சியை தேர்வு செய்த விஜய்: எம்ஜிஆர், விஜயகாந்த் என்ற இருபெரும் சினிமா ஆளுமைகள், பின்னர் அரசியல் ஆளுமைகளாகவும் அறியப்பட்டனர். அந்த வழியில் இப்போது நடிகர் விஜயும் அடியெடுத்து வைத்திருக்கிறார். தமிழக வெற்றிக்கழகம் என்று தமது கட்சியின் பெயரை கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்த அவர், இதுவரை தமது அரசியல் இயக்கத்தின் சார்பில் பிரமாண்ட பொதுகூட்டமோ, மாநாடோ நடத்தவில்லை.
எம்ஜிஆர் முதல் மாநாடு நடத்துவதற்கு முன்பே கட்சி பெயரை, கொடியை அறிவித்து அறிமுகப்படுத்தி விட்டார். அவரை பின்பற்றி வந்த விஜயகாந்த் தமது முதல் மாநில மாநாட்டில்தான் கட்சி பெயர், கொடி இரண்டையும் அறிவித்தார். இப்போது நடிகர் விஜய் தமது கட்சி பெயரை ஒரு அறிக்கையின் மூலம் அறிவித்தார். கொடியையும் ஒரு அரங்க கூட்டம் நடத்தி அறிவித்தார். பிரமாண்ட ஏற்பாடுகள் ஏதும் அவர் மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில் தமது முதல் மாநில மாநாட்டை முதலில் அவர் திருச்சியில் நடத்த உள்ளார் என்று சொல்லப்பட்டது.
ஆனால் திருச்சியில் பிரமாண்டமாக மாநாடு நடத்தும் வகையில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. பின்னர் ஈரோடு, சேலம் ஆகிய ஊர்களில் மாநாட்டை நடத்தலாம் என்று தவெக நிர்வாகிகள் விஜய்க்கு ஆலோசனை கூறினர். அதையும் விஜய் பரிசீலித்தார். எம்ஜிஆர் தமது முதல் மாநாட்டை திருச்சியில் நடத்தியது, விஜயகாந்த் தமது முதல் மாநில மாநாட்டை மதுரையில் நடத்தியது ஆகியவை ஒருபுறம் இருக்க விஜய் தமது முதல் மாநாட்டை ந டத்த விக்கிரவாண்டியை ஏன் தேர்வு செய்தார் என்பதில் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
விக்கிரவாண்டியை தேர்வு செய்த விஜய்:ஈரோடு, சேலம் ஆகியவை மாநிலம் முழுவதும் இருந்து வரும் தவெக தொண்டர்களுக்கு மையமாக இருக்காது என்று விஜய் கருதினார். திருச்சி அப்படி ஒரு மையமாக இருக்கும் என்று நினைத்தார். ஆனால், அவர் எண்ணப்படி இடம் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்துதான் தொண்டர்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் முதல் மாநில மாநாட்டை கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி நடத்துவது என்று அறிவிக்கப்பட்டது.
மாநாட்டுக்கு அனுமதி கோரி காவல்துறையிடம் மனு அளித்தபோது 33 விதமான விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என செப்டம்பர் 8ஆம் தேதி அனுமதி கொடுத்தனர். அதன் பின்னர் மாநாட்டு பணிகளைத் தொடங்கி முடிக்க முடியாது என்பதால் மாநாட்டை அக்டோபர் 27ஆம் தேதிக்கு தள்ளி வைப்பதாக தவெக தரப்பில் அறிவிக்கப்பட்டது. இப்போது அறிவிக்கப்பட்டபடி நாளை மாநாடு நடைபெற உள்ளது. விக்கிரவாண்டியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வி.சாலை என்ற கிராமத்தில் 85 ஏக்கர் நிலத்தை மாநாட்டிற்கான பந்தல், மேடை , விளக்குகள் அமைக்கும் பணிகளில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
விக்கிரவாண்டியில் நடைபெறும் முதல் மாநாட்டில் தவெக தரப்பில் வைக்கப்பட்ட பெரியார், அம்பேத்கர் , காமராஜர், சேர, சோழ, பாண்டியர், வேலுநாச்சியார், தியாகி அஞ்சலையம்மாள் ஆகியோரின் கட் அவுட்கள் பெரும் அளவில் கவனம் ஈர்த்துள்ளன. தமிழ்நாடு முழுமைக்குமான எல்லாத்தரப்பினருக்குமான அரசியல் பாதையை தாம் தேர்ந்தெடுத்திருப்பதை விஜய் சுட்டிக்காட்டுகிறார் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். தமிழக வெற்றி கழகத்துக்கு வெற்றி தரும் மாநாடாக விக்கிரவாண்டி மாநாடு இருக்கும் என்று விஜய் நம்புகிறார். அவரது நம்பிக்கை வெற்றி பெறும் என்று ரசிகர்களும் எதிர்பார்க்கின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்