தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை வான் சாகச நிகழ்ச்சி; 5 பேர் உயிரிழப்பு! - chennai air show - CHENNAI AIR SHOW

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் வெப்ப தாக்கத்தால் மயக்கம் அடைந்து கீழே விழுந்து ஐந்து பேர் உயிரிழந்து உள்ளதாக அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வான் சாகச நிகழ்ச்சி
சென்னை வான் சாகச நிகழ்ச்சி (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 7, 2024, 9:17 AM IST

சென்னை: மெரினா கடற்கரையில் 92வது விமானப்படை தின நிறைவை முன்னிட்டு இந்திய விமானப்படை சார்பாக விமான சாகச நிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது. வெகு விமரிசையாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றது. இதில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த பல்வேறு வகையான விமானங்கள், ஹெலிகாப்டர்கள் கலந்து கொண்டன.

இந்த நிகழ்ச்சியை சென்னை மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கண்டு களித்தனர். இவர்கள் அனைவரும் சென்னை மெரினா கடற்கரையில் ஒரே நேரத்தில் குவிந்ததால் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்டது.

அதே நேரத்தில் சென்னையில் நேற்று காலை முதலே வெப்பநிலை அதிக அளவில் இருந்ததால் விமான சாகசங்களை காண வந்த மக்கள் வெயிலின் தாக்கத்தால் மிகவும் அவதிக்கு உள்ளாகினர். இந்த நிலையில் விமான சாகச நிகழ்ச்சியை முடித்த பின்பு மெரினா கடற்கரையில் இருந்த மக்கள் ஒரே நேரத்தில் வெளியேறியதால் கடும் போக்குவரத்து நெரிசலும், கூட்ட நெரிசலும் ஏற்பட்டது.

கடும் வெப்பத்தாலும், கூட்ட நெரிசலாலும் 90க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நீர்ச்சத்து குறைந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். இந்த நிலையில் சென்னை கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜான் (56) என்பவர் மெரினா கடற்கரையில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியை பார்த்துவிட்டு திரும்பிச் சென்ற பொழுது திடீரென மெரினா கடற்கரையில் உள்ள நீச்சல் குளம் அருகே மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார்.’

இதையும் படிங்க:சென்னை விமானக் வான் சாகசம்: வானத்தில் காட்சி, மெரினாவில் மக்கள் வெள்ளம்; லிம்கா புத்தகத்தில் இடம்! - CHENNAI IAF AIR SHOW 2024

அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் கடும் வெப்பத்தின் தாக்கத்தினால் மயக்கமடைந்து உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல் சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (34) என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தை உடன் இருசக்கர வாகனத்தில் மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை பார்த்துவிட்டு திரும்பும் பொழுது வாகனத்தை நிறுத்தி திடீரென நெஞ்சை பிடித்துக் கொண்டு வாந்தி எடுத்துள்ளார்.

உடனடியாக அவருடைய மனைவி ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். மருத்துவர்கள் அவரை பரிசோதித்து பார்த்த பொழுது கார்த்திகேயன் வரும் வழியிலே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இவரும் கடும் வெப்பத்தினால் பாதிக்கப்பட்டு உயர்ந்திருக்கலாம் என மருத்துவர் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் சென்னை மடுவங்கரை பகுதியைச் சேர்ந்த தினேஷ் குமார் (40) என்பவர் மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருக்கும் போதே மயக்கம் அடைந்து கீழே விழுந்து உள்ளார். அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை அடுத்த பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (48). இவர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிடி ஸ்கேன் எடுக்கும் அலுவலகத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார் ஏற்கனவே இவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் பணியாற்றியிருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய மகளுடன் மெரினா கடற்கரையில் நடைபெற்ற வான்சாகச நிகழ்ச்சி பார்ப்பதற்காக இரு சக்கர வாகனத்தை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நிறுத்திவிட்டு இங்கிருந்து நடந்தே சென்று இருக்கிறார்.

வெயிலின் தாக்கத்தின் காரணமாக அந்த இடத்திலேயே மயக்கம் அடைந்து கீழே விழுந்து இருக்கிறார். இதனைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலமாக அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், சென்னை பார்த்தசாரதி ஆர்ச் வழியாக நின்று கொண்டு விமான சாகசங்களை கண்டு களித்த திருவல்லிக்கேணியைச் சேர்ந்த மணி (55) என்ற முதியவர் மயக்கம் அடைந்த நிலையில் கிடந்துள்ளார். அவரை மீட்டு சிகிச்சைக்காக ராயப்படை அரசு மருத்துவமனையில் சேர்த்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியைக் காண பதினைந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் குவிவார்கள் என தெரிந்தும் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு செய்யாதது தான் உயிரிழப்புக்கு காரணம் என பொதுமக்கள் சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்தநிலையில் சென்னை மெரினாவில் நடைபெற்ற வான்வழி சாகச நிகழ்ச்சியை காண வந்த லட்சக்கணக்கான நபர்களில் ஐந்து பேர் கடும் வெப்பத்தால் நீர்ச்சத்து குறைந்து மயக்கம் அடைந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details