தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“பூஜை செய்தால் இரட்டிப்பு பணம்” - ஆசை காட்டி ரூ.2 கோடி அபேஸ் செய்த சாமியார்! - சிக்கியது எப்படி? - THOOTHUKUDI MONEY SCAMS

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தை சேர்ந்த சாமியார்களான தந்தை - மகன் இருவரும் ஐந்துக்கும் மேற்பட்ட நபர்களிடம் இருந்து, ரூ.2 கோடிக்கும் மேலாக பணப்பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்ட தந்தை, மகன் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 13, 2025, 8:18 AM IST

தூத்துக்குடி:எட்டயபுரத்தைச் சேர்ந்த சாமியார்களான தந்தை - மகன் இருவரும் ஐந்துக்கும் மேற்பட்ட நபர்களிடம் இருந்து ரூ.2 கோடிக்கும் மேலாக பணம்பெற்ற வழக்கில், நேற்று (ஜன,12) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் ஓடக்கரை தெருவைச் சேர்ந்தவர் லிங்கராஜ் (42). இவர் ஏரல் (மெயின் பஜார்) பகுதியில் சாமி அலங்கார பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்து தொழில் நடத்தி வந்துள்ளார். இவரிடம் கடந்த 2018ஆம் ஆண்டு எட்டயபுரம் புங்கவர்நத்தம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (63) என்பவர் அறிமுகமாகி, தான் ஒரு சாமியார் என்றும், தான் அருள் வாக்கு கூறுவதால் புங்கவர்நத்தத்தில் புதிய கோயில் ஒன்றை நிறுவி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, அக்கோயிலில் விஷேச பூஜை செய்து பலரின் பிரச்சினைகளை முடித்து வைத்துள்ளதாகவும், பல பேருக்கு பணத்தை இரட்டிப்பு செய்து கொடுத்ததுள்ளதாகவும் என ஆசை வார்த்தைகளைக் கூறி, தனது மனைவி பாண்டியம்மாள் (57) மற்றும் தனது மகன் அய்யாதுரை (27) ஆகியோரையும் லிங்கராஜிடம் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.

மேலும், அவர்கள் லிங்கராஜுக்கும் பூஜை செய்ய வேண்டும் என்றும், அப்படி செய்தால் தொழில் பெரிய அளவில் நடைபெறும் என்றும் ஆசை வார்த்தைகளைக் கூறியுள்ளனர். அதை நம்பிய லிங்கராஜ் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை பல்வேறு தவணைகளாக ரூ.38 லட்சம் வரை பாலசுப்பிரமணியிடம் கொடுத்துள்ளார்.

அதேபோன்று, லிங்கராஜின் நண்பரான ஆனந்தகுமார் என்பவரும் ரூ.29 லட்சம் பணத்தையும் பாலசுப்பிரமணியத்திடம் கொடுத்துள்ளார். இந்த நிலையில், லிங்கராஜ் பாலசுப்பிரமணியன் மற்றும் அவரது குடும்பத்தாரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டபோது அவர்கள் தொலைபேசி எண்ணை அனைத்து விட்டுத் தலைமறைவாகிவிட்டது தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க:“நான் ஜி.எஸ்.டி அதிகாரி! ரசீது இல்லன்னா ரூ.2,000 கொடுங்க!” - சென்னை புறநகர் பகுதியில் உலா வரும் போலி அதிகாரி!

இதனையடுத்து, லிங்கராஜூம் அவரது நண்பர் ஆனந்தகுமார் என்பவரும் எட்டயபுரம், புங்கவர்நதத்திற்கு வந்து பலமுறை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. அங்கு விசாரித்ததில் இவர்களைப் போல் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரிடம் ரூ.27 லட்சமும், மாரிமுத்து என்பவரிடம் ரூ.10 லட்சமும், இருளப்பன் என்பவரிடம் ரூ.7 லட்சமும், எட்டயபுரத்தைச் சேர்ந்த மாரிகண்ணு என்பவரிடம் ரூ.5 லட்சமும், சாந்தி என்பவரிடம் ரூ.17 லட்சமும்;

திண்டுக்கல்லைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரிடம் ரூ.10 லட்சத்து 60 ஆயிரமும், கமலக்கண்ணனிடம் ரூ.16 லட்சமும், மாரியம்மாளிடம் ரூ.29 லட்சத்து 40 ஆயிரமும், திருமலைச்சாமி என்பவரிடம் ரூ.40 லட்சம் என மொத்தமாக ரூ.2 கோடியே 29 லட்சம் பணத்தை ஆசை வார்த்தை கூறி மோசடி செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டது தெரியவந்துள்ளது.

அப்போது தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த லிங்கராஜ், இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி, மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ராஜு, மேற்பார்வையில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் லெட்சுமி பிரபா தலைமையில் சார்பு ஆய்வாளர் நிவேதா, சிறப்பு சார்பு ஆய்வாளர் மோகன் ஜோதி மற்றும் தலைமைக் காவலர் வேல்ராஜ் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர், பாலசுப்பிரமணியன் மற்றும் அவரது மகன் அய்யாதுரை ஆகிய இருவரையும் நேற்று (ஜன.12) கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர். தற்போது, இந்த சம்பவம் குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details