திருச்சி: தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNPSC) குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஜூன் 20ஆம் தேதி வெளியிட்டது. அதன்படி, 2 ஆயிரத்து 327 காலிப் பணியிடங்களுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வுக்கு தமிழகம் முழுவதும் இருந்து 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வெழுதிய தந்தை - மகள் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) இந்நிலையில், குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான போட்டித் தேர்வு இன்று (செப்டம்பர் 14) தமிழகம் முழுவதும் காலை 9.30 மணி முதல் தொடங்கி 12.30 மணி வரை நடைபெற்றது. இதில், திருச்சி மாவட்டத்தில் மட்டும் 115 தேர்வு மையங்களில் 33 ஆயிரத்து 106 பேர் தேர்வு எழுதியுள்ளனர். இந்நிலையில், பொன்மலைப்பட்டி இருதய மேல்நிலைப்பள்ளியில் தந்தை மற்றும் மகள் இருவரும் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதியுள்ளனர்.
திருச்சி தனியார் பள்ளியில் வேதியியல் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் இளங்கோவன். இவரது மகள் மதுபாலா. இவர் சிவில் இன்ஜினியரிங் படித்து முடித்துள்ளார். இந்நிலையில், இளங்கோவன் கடந்த 20 ஆண்டுகளாக போட்டித் தேர்வுகளை எழுதி வருகிறார். விடாமுயற்சியாக தற்போது 20வது முறையாக டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வை எழுதியுள்ளார். இவரது மகள் மதுபாலாவும் போட்டித் தேர்வுகளை எழுதி வருகிறார்.
இதையும் படிங்க:கேட்டை உடைத்து தேர்வு மையத்திற்குள் சென்ற குரூப் 2 தேர்வர்கள்.. புதுக்கோட்டையில் பரபரப்பு!
இந்நிலையில், தந்தை - மகள் இரண்டு பேரும் ஒரே மையத்தில் தேர்வு எழுதியுள்ளனர். இதுவரை வெவ்வேறு மையத்தில் தேர்வு எழுத ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த முறை ஒரே மையத்தில் இரண்டு பேருக்கும் தேர்வு எழுத வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்படி தந்தையும், மகளும் பொன்மலைப்பட்டி இருதய மேல்நிலைப்பள்ளியில் இரு வேறு அறைகளில் தேர்வு எழுதியுள்ளனர்.
இது குறித்து தேர்வு எழுதிய இளங்கோவன் கூறுகையில், “நானும், எனது மகளும் குரூப் 2 தேர்வு எழுதுவதை மிகவும் பெருமையாக நினைக்கின்றோம். அரசு கொடுக்கும் சலுகையால் தேர்வு எழுத வாய்ப்பு கிடைத்தது. எனக்கு தற்போது 53 வயதாகிறது. என்னுடைய விடாமுயற்சியால் ஒரு நாள் நிச்சயம் வெற்றி பெறுவேன். ஒரு நாளாவது அரசு ஊழியராக இருக்க வேண்டும். என் மகளோடு ஒரு மையத்தில் தேர்வு எழுதுவது மகிழ்ச்சியாக உள்ளது. கடவுள் கொடுத்த வரமாக கருதுகிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து தேர்வு எழுதிய மதுபாலா கூறுகையில், “ பல முறை தேர்வு எழுதிள்ளேன். எனது தந்தைக்கும், எனக்கும் வெவ்வேறு மையத்தில் தேர்வு எழுத இடம் ஒதுக்கப்படும். இந்த ஆண்டு ஒரே மையத்தில் தந்தையுடன் சேர்ந்து தேர்வு எழுதுவது நல்ல அனுபவமாக உள்ளது” என்றார்.