தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுடுகாட்டில் பிணமாக படுத்த விவசாயிகள்.. திருச்சியில் வலுக்கும் போராட்டம்! - trichy farmers protest

Trichy farmers protest: திருச்சி ஓயாமரி சுடுகாட்டில், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் பிணமாக படுத்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.

போராட்டம் நடத்திய விவசாயிகள் மற்றும் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு
போராட்டம் நடத்திய விவசாயிகள் மற்றும் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு (Credits-ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 30, 2024, 5:00 PM IST

திருச்சி: விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை தருவதாகக் கூறிவிட்டு தராமல் ஏமாற்றியதை நிறைவேற்றக் கோரியும், விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்யக் கோரியும், கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றக் கோரியும், விவசாயிகளுக்கு மாத ஓய்வூதியம் ரூ.5,000 வழங்கக் கோரியும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் கர்நாடக அரசு மாதந்தோறும் தண்ணீர் திறக்க உடனடியாக மத்திய அரசு உத்தரவிடக் கோரியும் மற்றும் மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

அய்யாக்கண்ணு பேட்டியளித்த காட்சி (Credits-ETV Bharat Tamil Nadu)

2014, 2019ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு அதனை மோடி நிறைவேற்றாததைக் கண்டித்தும், விவசாயிகள் டெல்லி சென்று போராட்டம் நடத்த விடாமலும், அய்யாக்கண்ணு உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்துப் போட்டியிடக்கூடாது என்பதற்காக அவர் ரயில் பயணம் செய்யக்கூடாது என உறுதியான ரயில்வே பயணச்சீட்டை ரத்து செய்வது, செல்ல விடாமல் காவல்துறையை வைத்து கைது செய்வது போன்ற செயல்களில் மத்திய அரசு ஈடுபட்டதாக குற்றம் சாட்டினர்.

2,000 கிலோமீட்டர் தொலைவில் இருந்து பிரதமர் மோடி வாரணாசி வந்து போட்டியிடலாம், 2,000 கிலோமீட்டர் தொலைவில் இருந்து ராகுல்காந்தி கேரளாவில் வந்து போட்டியிடலாம். ஆனால், தமிழக விவசாயிகள் வாரணாசி சென்று போட்டியிட்டால் விளம்பரதிற்காக என்று உச்ச நீதிமன்றம் கூறுவது எந்த வகையில் நியாயம்? இது ஜனநாயக நாட்டில் சர்வாதிகார ஆட்சி அல்லவா என ஆதங்கம் அளித்தனர்.

விவசாயிகளுக்கு நியாயம் வேண்டும் என்று வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சி ஓயாமரி சுடுகாட்டில் கோஷங்கள் முழங்க போராட்டம் நடத்தினர். இப்போராட்டம் குறித்து தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் தலைவர் அய்யாக்கண்ணு அளித்த பேட்டியில், “இந்தியா ஒரு ஜனநாயக நாடு. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை விவசாயிகள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால், டெல்லிக்கு விவசாயிகள் வரக்கூடாது என்று துப்பாக்கிச்சூடு நடத்துகிறார்கள்.

இந்தியா ஜனநாயக நாடா அல்லது சர்வாதிகார நாடா? விவசாயிகள் பாஜகவிற்கு எதிரானவர்கள் அல்ல, விவசாயிகள் விளைவிக்கும் பொருளுக்கு நியாயமான விலையைக் கொடுக்க வேண்டும். விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் மற்றும் காவிரி - கோதாவரி ஆறுகளை இணைக்க வேண்டும் என்பது எங்களுடைய முக்கியமான கோரிக்கையாகும்.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கின கடனை தள்ளுபடி செய்ய நிதி அமைச்சரும், பிரதமரும் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அமித்ஷா மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் விவசாயிகளிடம் காவிரியும், கோதாவரியும் இணைக்கும் திட்டத்தைச் செயல்படுத்துகிறோம் என்று கூறினார்கள். ஆனால், 300 டிம்சி தண்ணீரை விவசாயிகளுக்கு முறையாகத் திறக்கவில்லை. விவசாயிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தார்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறார்கள்.

இந்திய நாட்டை சர்வாதிகார நாடாக மோடி மாற்றி வருகிறார். விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், மக்களையும் காப்பாற்ற மத்திய, மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பிரதான கோரிக்கையாக முன் வைக்கிறோம்” எனக் கூறினார்.

இதையும் படிங்க:சென்னையில் பிரதமர் மோடி படத்துடன் கூடிய '#GoBackModi' போஸ்டர்! - Go Back Modi Poster

ABOUT THE AUTHOR

...view details